சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று (டிசம்பர் 28) அமைத்து உத்தரவிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரி, வழக்கறிஞர்கள் வரலெட்சுமி, மோகன்தாஸ் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியன், லட்சுமிநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்றைய விசாரணையைத் தொடர்ந்து இன்றும் விசாரணைக்கு வந்தது.
காவல்துறை தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, “மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், குற்றவாளி ஒருவர் மட்டுமே இந்த வழக்கில் தொடர்புடையவர் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ளார்” என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி சுப்பிரமணியன், “மற்ற எல்லா குற்றங்களுக்கும் ஆணையர் இதுபோன்று ஊடகங்களை சந்தித்து பேட்டி கொடுக்கிறாரா?” என்று கேள்வி எழுப்பினார்.
அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், “சில கிரிமினல் வழக்குகளின் அடிப்படையில் சட்டம் ஒழுங்குக்கு பிரச்சினை ஏற்படுத்தப்படும்போது மட்டுமே ஆணையர் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கிறார். அவர் ஊடகங்களை சந்தித்து பேட்டியளிப்பதில் சட்டப்படி எந்தத் தடையும் இல்லை.
செய்தியாளர் சந்திப்பில் கமிஷனர் வார்த்தைகளை மிகவும் கவனமாக பயன்படுத்தினார். காவல்துறை யாரையும் பாதுகாக்கவில்லை என்பதை மாணவர்களிடம் எடுத்துக் கூறவே இந்த செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டது.
தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் ஆய்வின்படி, சென்னை மற்றும் கோவை தான் நாட்டிலேயே பாதுகாப்பான நகரங்கள். ஊடகங்கள் இந்த விவகாரத்தில் பொறுப்புடன் செயல்பட வேண்டும். மாணவி தொடர்பான லீக்கான எஃப்.ஐ.ஆரை வெளியிட்டு ஊடகங்கள் இந்த விவகாரத்தை பரபரப்பாக்கிவிட்டனர்” என்று வாதிட்டார் அட்வகேட் ஜெனரல்.
அதற்கு நீதிபதிகள், “குற்றங்கள் நடைபெறாததற்கு காவல்துறை கிரெடிட் எடுத்துக்கொள்ள முடியாது. ஏனென்றால் இந்த பகுதிகளில் வசிப்பவர்களில் நிறைய நல்லவர்கள் இருக்கிறார்கள்
பத்திரிகை சுதந்திரத்தை தடுக்க முடியாது. காவல்துறையைப் பற்றிய நல்ல செய்திகளையும் அவர்கள் வெளியிடுகிறார்கள். அதை நீங்கள் எதிர்க்கிறீர்களா?
எல்லா தவறான செயல்களும் வெளிச்சத்திற்கு வருவது பத்திரிகைகளால் தான் என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும். செய்தியாளர்கள் ஒன்றும் எதிரிகள் அல்ல. அவர்கள் உங்களுக்கு விரும்பத்தகாத ஒன்றைச் சொன்னால், ஏற்றுக்கொள்ள முடியாதது போன்று உங்களுக்கு தோன்றுகிறது” என்று கூறினார்கள்.
அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன், “மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். பாதிக்கப்பட்டவர்களுடன் பல்கலைக்கழகம் துணை நிற்கிறது” என்று தெரிவித்தார்.

நீதிபதி சுப்பிரமணியன், “குற்றம் சாட்டப்பட்ட நபரை வாயிற் பாதுகாவலர்கள் ஏன் விசாரிக்கவில்லை?
இதுபோன்ற பாலியல் வன்கொடுமைகள் பல்கலைக்கழகத்தில் நீண்ட காலமாக நடந்து வருவதாகவும், சில ஆசிரியர்களே இதற்கு ஆதரவளிப்பதாகவும் பழைய மாணவர்கள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவி பல்கலைக்கழகத்தில் படிப்பைத் தொடர அனுமதிக்க வேண்டும்” என குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன், “நிச்சயமாக நான் விளக்குகிறேன். சனிக்கிழமை கூட இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்திருப்பதால் உங்களை மிகவும் பாராட்டுகிறேன். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக ஒரு குழுவை அமைத்துள்ளோம்” என்று தெரிவித்தார்.
அப்போது நீதிபதிகள், “நீங்கள் மனதிற்குள் எங்களை திட்டிக்கொண்டிருப்பீர்கள் என்று எங்களுக்கு தெரியும்” என கூற… கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன், “இல்லை, இல்லை மை லார்ட். நான் உண்மையிலேயே உங்களை பாராட்டுகிறேன்” என மீண்டும் தெரிவித்தார்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மணி, “இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் திமுக தலைவர்களுடன் புகைப்படம் எடுத்துள்ளார்” என்ற வாதத்தை முன்வைத்தார்.
அதற்கு நீதிபதி லட்சுமிநாராயணன், “எங்களுடன் கூட பலர் புகைப்படம் எடுக்கிறார்கள். அப்படியென்றால் அவர்கள் செய்யும் குற்றங்களுக்கு நாங்களும் உடந்தையாக இருக்கிறோமா?” என்று கேள்வி எழுப்பினார்.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த பிறகு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
“அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை மற்றும் எஃப்.ஐ.ஆர் கசிவு தொடர்பான வழக்கை விசாரிக்க சினேகா பிரியா, அய்மன் ஜமால் மற்றும் பிருந்தா ஆகிய ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்கள் அடங்கிய எஃப்.ஐ.ஆரை வெளியிட்டதற்காக, ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவிக்கு இலவசக் கல்வி, தங்குமிடம் மற்றும் கவுன்சிலிங் வசதிகளை அண்ணா பல்கலைக்கழகம் ஏற்படுத்தித்தர வேண்டும்.
செய்தியாளர் சந்திப்பை நடத்தி, விசாரணை விவரங்களை பத்திரிகையாளர்களிடம் தெரிவித்ததற்காக, சென்னை போலீஸ் கமிஷனர் மீது, தேவைப்பட்டால், தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நெல்லையில் கேரள மருத்துவக்கழிவுகளை கொட்டிய நிறுவனம் எது?
பாலியல் வன்கொடுமை… எஃப்.ஐ.ஆரை டவுன்லோட் செய்த 14 பேரிடம் விசாரணை… உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு