கணவனால் கைவிடப்பட்ட பெண் ஜெசிந்தாவுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டையை சேர்ந்த ஜெசிந்தா சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், “2007-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.
இரண்டு ஆணடுகளுக்கு பிறகு கணவனால் கைவிடப்பட்டு எனது பெற்றோருடன் வசித்து வந்தேன். அரசு ஊழியரான எனது தந்தை 1993-ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்றார்.
2019-ஆம் ஆண்டு இறக்கும் வரை ஓய்வூதியம் பெற்றார். தந்தையின் இறப்பிற்கு பிறகு தாயார் ஓய்வூதியம் பெற்று வந்தார். எனது தாய் 2020-ஆம் ஆண்டு இறந்தார். பின்னர் குடும்ப ஓய்வூதியத்திற்காக விண்ணப்பித்தேன்.
2011-ஆம் ஆண்டு தமிழக அரசு வெளியிட்ட அரசாணையின் படி திருமணமாகாத, விவாகரத்து பெற்ற அல்லது விதவைகளுக்கு மட்டுமே குடும்ப ஓய்வூதியம் பெற தகுதியுடைவர்கள் என்று கூறி விண்ணப்பத்தை நிராகரித்தனர்.
குடும்ப ஓய்வூதியம் வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விக்டோரியா கெளரி,
“மனுதாரர் தனது பிழைப்புக்காக குடும்ப ஓய்வூதியம் கேட்டிருக்கிறார். தமிழக அரசின் அரசாணையில் கணவனால் கைவிடப்பட்ட பெண்களை ஓய்வூதியம் பெற சேர்க்கவில்லை.
மனுதாரருக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்காதது அவரது வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும். பராமரிக்க யாரும் இல்லாததால் அவரை காப்பாற்றுவது அரசின் கடமையாகும்.
இறந்த குடும்ப ஓய்வூதியதாரர்களின் திருமணமாகாத, விதவை, விவாகரத்து பெற்ற மகள்களுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்குவதை போல கணவனால் கைவிடப்பட்ட மகள்களுக்கும் ஓய்வூதியம் வழங்குவதை கருத்தில் கொள்ள வேண்டும்.
ஆதரவற்றோர் பிரிவின் கீழ் வரும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு குடும்ப ஓய்வூதியத்தின் பலனை விலக்குவது முற்றிலும் பாரபட்சமானது. எனவே மனுதாரருக்கு 12 வாரங்களில் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியம் வழங்குவதற்கான அரசாணையில் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கனமழையால் விடுமுறை அறிவிப்பு… கல்லூரி தேர்வுகள் நடைபெறுமா?
கனமழை எதிரொலி: 27 மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த அவசர கடிதம்!