பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், ரெட்பிக்ஸ் யூடியூப் சேனல் நிறுவனர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஜூலை 31) நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
சவுக்கு சங்கரின் சர்ச்சைக்குரிய பேட்டியை ஒளிபரப்பிய பெலிக்ஸ் கடந்த மே 11-ஆம் தேதி டெல்லியில் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் திருச்சி சிறையில் நீதிமன்ற காவலில் உள்ளார்.
இந்தநிலையில், தனக்கு ஜாமீன் கோரி பெலிக்ஸ் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே நிராகரித்திருந்தது. இந்தநிலையில், மீண்டும் ஜாமீன் கோரி பெலிக்ஸ் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
காவல்துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் மருதாச்சலம் ஆஜராகி,
“சவுக்கு சங்கரிடம் உள்நோக்கத்துடனும் அவரைத் தூண்டும் வகையிலும் பெலிக்ஸ் கேள்விகளை கேட்டுள்ளார். மேலும், பெண்களை இழிவுபடுத்தும் வகையில் உயர் அதிகாரிகளின் பெயர்களை குறிப்பிட்டு அந்த பேட்டியில் பேசியுள்ளார்.
இதேபோல் சர்ச்சைக்குரிய ஒரு பேட்டியை ஒளிபரப்பியதற்காக பெலிக்ஸுக்கு ஏற்கனவே நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. ஆனால், நீதிமன்றத்தின் உத்தரவுகளை மதிக்காமல் அவர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். எனவே அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கக்கூடாது. அவரது சேனலை மூட உத்தவிட வேண்டும்” என்ற வாதத்தை முன்வைத்தார்.
பெலிக்ஸ் ஜெரால்டு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான்சத்தியன், “சவுக்கு சங்கர் பேசிய கருத்துக்கும் மனுதாரருக்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது. சம்பந்தப்பட்ட சர்ச்சைக்குரிய பேட்டியை ஒளிபரப்பு செய்ததற்காக மன்னிப்பு தெரிவித்துள்ளார்.
அவரிடமிருந்து 87 ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது. கடந்த 80 நாட்களுக்கும் மேலாக மனுதாரர் சிறையில் இருக்கிறார். இதனை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” என்று வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, டி.வி.தமிழ்செல்வி, ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலை மூட வேண்டும். இந்த வழக்கு தொடர்பாக பேட்டி எதுவும் கொடுக்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மாணவர்களுக்கு மாதம் ஆயிரம்… ‘தமிழ் புதல்வன்’ திட்டம் எப்போது?
”வயநாடு நிலச்சரிவு பகுதிக்கு தேவையின்றி வராதீங்க” : பினராயி வேண்டுகோள்!