சென்னை மெரினா கடற்கரையில், காவல்துறையினரிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட சந்திரமோகன் மற்றும் அவரது தோழி தனலெட்சுமி ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று (நவம்பர் 8) ஜாமீன் வழங்கியுள்ளது.
கடந்த அக்டோபர் 21-ஆம் தேதி இரவு சென்னை மெரினா கடற்கரை நொச்சிக்குப்பம் அருகே சாலையின் குறுக்கே காரை நிறுத்தி விட்டு போதை ஜோடி இருவர் அட்ராசிட்டியில் ஈடுபட்டனர்.
அப்போது ரோந்துப் பணியில் ஈடுபட்ட போலீஸார் காரை எடுக்கும்படி கூறினர். இதி்ல் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து வேளச்சேரியைச் சேர்ந்த சந்திரமோகன் மற்றும் அவரது தோழியான மயிலாப்பூரைச் சேர்ந்த தனலட்சுமி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். இருவர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தனலட்சுமியும், சந்திரமோகனும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தனி தனியாக மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தார். இந்தநிலையில், இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், “இருவரும் பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டதால் ஜாமீன் வழங்கக்கூடாது” என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
அப்போது நீதிபதி, ” இருவரையும் எவ்வளவு நாட்கள் சிறையில் வைக்கப்போகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து இருவருக்கும் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். மேலும், சந்திரமோகன் மட்டும் தினமும் தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தனுஷ் – ராஜ்குமார் பெரியசாமி இணையும் ‘D55′ ! : அதிகாரப்பூர்வ அறிவிப்பு
என்ன இது சின்னப்புள்ளத்தனமா இருக்குதே… கேப்டனுடன் சண்டை போட்ட அல்சாரி ஜோசப்