2024ஆம் ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருதை எம்எஸ் சுப்புலட்சுமி பெயரில் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்க கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று (நவம்பர் 19) தடை விதித்துள்ளது.
சமூக கருத்துக்களையும், மத நல்லிணக்கத்தையும் வலியுறுத்தி இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருபவர் இசைக்கலைஞர் டி.எம் கிருஷ்ணா.
இந்த ஆண்டுக்கான ’சங்கீத கலாநிதி’ விருதுக்கு சென்னை மியூசிக் அகாடமி சார்பில் டி.எம்.கிருஷ்ணா தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
இதற்கு கர்நாடக இசை கலைஞர்களான காயத்ரி, ரஞ்சனி ஆகியோர் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.
“டி.எம்.கிருஷ்ணா கர்நாடக இசை உலகத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியவர். அவரது செயல்கள் கர்நாடக இசைக்கலைஞர்களாக இருப்பதே அவமானம் என்ற எண்ணத்தைத் தூண்டும் வகையில் இருக்கிறது. இசை உலகில் மிகவும் போற்றத்தக்க நபர்களான தியாகராஜர், எம்.எஸ்.சுப்புலட்சுமி போன்றவர்களை அவமதித்தவர் டி.எம்.கிருஷ்ணா.
பெரியாரை போற்றும் கருத்துக்களை டி.எம்.கிருஷ்ணா முன்வைத்துள்ளார். ’பிராமணர்கள்’ இனப்படுகொலையை வெளிப்படையாக ஆதரித்த, பிராமண சமூகத்தின் பெண்களை தகாத வார்த்தைகளால் பேசிய ஈவெரா போன்ற ஒரு நபரை டிஎம் கிருஷ்ணா புகழ்வதை கவனிக்காமல் இருப்பது ஆபத்தானது” என்று கூறியிருந்தனர்.
அதேசமயம் முதல்வர் ஸ்டாலின் , “டி.எம்.கிருஷ்ணா இசைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்புகளுக்கு, உரிய மரியாதையையும் அங்கீகாரத்தையும் வழங்கிடும் வகையில் தகுதியானவரைத் தேர்ந்தெடுத்த மியூசிக் அகாடமி நிர்வாகிகள் நம் பாராட்டுக்கு உரியவர்கள்” என்று வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இந்தசூழலில், மறைந்த கர்நாடக இசை பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின் பேரன் சீனிவாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடர்ந்தார்.
அதில், “எனது பாட்டியின் மறைவுக்குப் பிறகு அவரது நினைவை போற்றும் வகையில் சென்னை மியூசிக் அகாடமி, ஆங்கில நாளிதழுடன் இணைந்து 2005 முதல் சங்கீத கலாநிதி எம்.எஸ் சுப்புலட்சுமி விருதுடன், 1 லட்சம் ரூபாய் ரொக்கமும் வழங்கி வருகிறது.
வரும் டிசம்பரில் நடைபெறும் 98ஆவது விழாவில் பாடகர் டி எம் கிருஷ்ணாவுக்கு விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
என் பாட்டிக்கு எதிராக இழிவான, மோசமான மற்றும் அவதூறான கருத்துக்களை டி.எம்.கிருஷ்ணா கூறி வருகிறார். எனவே அவருக்கு இந்த விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருப்பது எங்கள் குடும்பத்தினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
கர்நாடக இசை உலகில் தன் நம்பகத் தன்மையைக் கேள்விக்குள்ளாக்கிய ஒருவரை எப்படிக் கெளரவிக்க முடியும் என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.
எனவே, சங்கீத கலாநிதி விருதினை, எம்.எஸ். சுப்புலட்சுமி பெயரில் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்கக் கூடாது’ என்று கோரியிருந்தார்.
இந்த மனுவிற்கு மியூசிக் அகாடமியும், தி இந்து குழுமமும் தனித்தனியாக பதில் மனு தாக்கல் செய்தன.
அதில், “மனுதாரர் எம்.எஸ். சுப்புலட்சுமியின் உண்மையான வாரிசுதானா என்று தெரியவில்லை. எம்.எஸ். சுப்புலட்சுமி குடும்ப உறுப்பினர்கள் இதற்கு எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று (நவம்பர் 19) நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் விசாரணக்கு வந்தது.
அப்போது, இந்த ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருதை எம்.எஸ் சுப்புலட்சுமி பெயரில் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்க நீதிபதி தடை விதித்தார்.
மேலும், எம்.எஸ். சுப்புலட்சுமி பெயரை பயன்படுத்தாமல் விருது வழங்கலாம் என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார் நீதிபதி ஜெயச்சந்திரன்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
இந்திக்கு மாறிய எல்.ஐ.சி வலைத்தளம்… இந்தியர்களுக்கு இழைக்கப்படும் துரோகம் : ஸ்டாலின் கண்டனம்!
எங்கு பார்த்தாலும் லஞ்சம்! – டெல்லி கிரிக்கெட் சங்கம் இப்படியா?