கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் கடந்த 13ஆம் தேதி உயிரிழந்த மாணவியின் உடலை நாளை (ஜூலை 22) காலை 11 மணிக்குள் பெற்றுக்கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி அருகே சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 13ஆம் தேதி 12ஆம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். மாணவியின் தந்தை தொடர்ந்த வழக்கில் உடலை மறு கூராய்வு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், உடல் மறு கூராய்வுக்குப் பிறகும் மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள பெற்றோர் மறுப்பதாக தமிழக அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இது தொடர்பான வழக்கு இன்று (ஜூலை 22) விசாரணைக்கு வந்தது.
அப்போது, ”நீதிமன்றம் மீது நம்பிக்கை இருக்கிறதா இல்லையா? ஏற்கனவே சிபிசிஐடி இந்த வழக்கை விசாரித்து வருகிறது. வேறு என்ன வேண்டும்? என மாணவியின் பெற்றோருக்கு நீதிபதி சதீஷ்குமார் கேள்வி எழுப்பினார்.
அப்போது ஓய்வு பெற்ற தடயவியல் நிபுணர் சாந்தகுமார் ஆஜராகி, ”உடல் மறுகூராய்வு சரியான முறையில் நடைபெற்றது. 2 பிரேத பரிசோதனைகளும் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளன. 2ஆவது பிரேதப் பரிசோதனையில் புதிதாக எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை” என நீதிபதி முன்பு விளக்கமளித்தார்.
அப்போது நீதிமன்றம் உத்தரவிட்டும் உடலை பெற்றுக்கொள்வதில் என்ன தாமதம் என கேள்வி எழுப்பிய நீதிபதி, “ஒவ்வொரு கட்டத்திலும் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறீர்கள். மகளின் உடலை வைத்து பந்தயம் கட்டாதீர்கள். அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும். மாணவி மரண வழக்கில் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை திரும்பப்பெற போவதில்லை. வன்முறையில் பாதித்த மாணவர்களை பற்றி எவரும் பேசவில்லை. கல்வி பாதிக்கப்பட்ட மாணவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை யோசித்து பார்க்க வேண்டும். அவர்களின் கல்வியை மீட்டெடுக்க வேண்டும்” எனவும் நீதிபதி தெரிவித்தார்.
அப்போது இதுகுறித்து முதலமைச்சர் ஆலோசித்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ”மாணவியின் மரணத்தில் வேறு சிலர் ஆதாயம் தேடுவது மாணவியின் பெற்றோருக்கே தெரியாமல் நடக்கிறது. மாணவி மரணம் தொடர்பாக சமூக வலைதளங்கள் முழுவதும் பொய் செய்தியை பரப்பியுள்ளனர்” என நீதிபதி கூறினார்.
மாணவியின் பிரேதப் பரிசோதனை அறிக்கைகளை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் 3 மருத்துவர்கள் கொண்ட குழு மற்றும் தகுந்த தடயவியல் நிபுணர்களைக் கொண்டு ஆய்வுசெய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, அறிக்கைகள் மற்றும் பிரேதப் பரிசோதனை வீடியோக்களை ஜிப்மர் தரப்பிடம் ஒப்படைக்கவும் தமிழக அரசுக்கு ஆணையிட்டார்.
மாணவி இறந்து 10 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் எப்போது உடலை பெற்றுக் கொள்வீர்கள். மாணவிக்கு கண்ணியமான முறையில் இறுதிச்சடங்கு நடத்துங்கள். மகளின் ஆன்மா இளைப்பாறட்டும்” என பெற்றோருக்கு அறிவுரை கூறினார்.
நாளை காலை 11 மணிக்குள் மாணவியின் உடலை பெற்றுக்கொள்வீர்கள் என நம்புவதாக தெரிவித்த நீதிபதி, உடலை பெற மறுத்தால் காவல்துறை தலையிட்டு சட்டப்படி இறுதிச்சடங்குகளை நடத்தலாம் என உத்தரவிட்டார். உடலை எப்போது பெற்றுக்கொள்வீர்கள் என 12 மணிக்குள் தெரிவிக்க வேண்டும் என மாணவியின் பெற்றோர் தரப்புக்கு ஆணையிட்ட நீதிபதி, வழக்கை ஒத்திவைத்தார்.
~அப்துல் ராபிக் பகுருதீன்