கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவியின் உடலை வைத்து பந்தயம் கட்டாதீர்கள் என பெற்றோருக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கனியமூரில் இயங்கி வரும் சக்தி மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவி கடந்த 13ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி பெற்றோர் மற்றும் உறவினர்கள் தொடர் போராட்டங்களை நடத்திவந்தனர். கடந்த ஜூலை 17ஆம் தேதி நடந்த போராட்டத்தில் கலவரம் வெடித்தது.
மாணவியின் தந்தை ராமலிங்கம் தனது மகளின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தங்களது தரப்பு மருத்துவரும் பிரேதப் பரிசோதனை குழுவில் இடம் பெற வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், ஓய்வு பெற்ற தடயவியல் நிபுணர் மற்றும் 3 அரசு மருத்துவர்கள் கொண்ட குழுவை அமைத்து மறுபிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார். ஆனால், மாணவியின் தந்தையின் கோரிக்கைப்படி மனுதாரர் தரப்பில் மருத்துவர் நியமிக்கப்படவில்லை.
இதனை எதிர்த்து மாணவியின் தந்தை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி பி.ஆர்.ஹவாய் , இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தையே நாடுமாறு மனுதாரர் தரப்புக்கு அறிவுறுத்தினார்.
இதற்கிடையில் உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ் குமார் முன்பு ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, “ மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்ட மாணவியின் உடலை பெற்றோர் வாங்க மறுக்கின்றனர். உடலை வாங்க அவர்களுக்கு உத்தரவிட வேண்டும். இது தொடர்பான மனுவை அவசரம் கருதி விசாரிக்க வேண்டும்” என கோரிக்கை வைத்தார்.
அப்போது மாணவியின் தந்தை ராமலிங்கம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கரசுப்பு, “ உயர் நீதிமன்ற உத்தரவை மீறி பெற்றோர் மற்றும் வழக்கறிஞர் இல்லாமல் மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. எங்கள் தரப்பு மருத்துவரைக் கொண்டு மறுபிரேத பரிசோதனையை செய்ய வேண்டும் என்ற எங்களது கோரிக்கையை மீண்டும் உயர் நீதிமன்றத்திலேயே முறையிடும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது” என கூறினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சதீஷ் குமார், உச்ச நீதிமன்ற தீர்ப்பு நகலை இன்று ( ஜூலை 22) தாக்கல் செய்ய உத்தரவிட்டார். மேலும், அவசரம் கருதி இந்த வழக்கு முதல் வழக்காக விசாரிக்கப்படும் எனவும் கூறினார்.
அதன்படி இன்று காலை 10:30 மணிக்கு மேல் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி சதீஷ் குமார் முன்பு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நகல் தாக்கல் செய்யப்பட்டது.
தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி, நீதிமன்றம் மீது நம்பிக்கை இல்லையா, நீதிமன்றம் உத்தரவிட்டும் மாணவியின் உடலை பெற்றுக்கொள்வதில் தாமதம் ஏன்? என மாணவியின் தந்தை தரப்பிடம் கேள்வி எழுப்பினார். மேலும், மாணவியின் உடலை வைத்து பந்தயம் கட்டாதீர்கள்” என அறிவுறுத்தினார். மாணவியின் உடல் கூராய்வு அறிக்கைகளை ஜிப்மர் மருத்துவமனையின் 3 மருத்துவர்கள் கொண்ட குழு ஆய்வு செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.
~அப்துல் ராபிக் பகுருதீன்