மெட்ராஸ் ஐ நோய்க்குப் பயன்படுத்தப்படும் மருந்துகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கடந்த ஒருவார காலமாக மெட்ராஸ் ஐ என்ற கண் நோய் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது.
இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று(நவம்பர் 21) சென்னை எழும்பூரில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், “தமிழகம் முழுவதும் 90இடங்களில் அரசு கண் மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன. இதில் தினசரி பாதிப்பு என்பது ஒவ்வொரு நாளும் 4,000 முதல் 4,500 வரை இருக்கிறது.
வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாள் முதல் மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்பட்ட 1.50 லட்சம் பேருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதில் ஒருவருக்குக்கூட பார்வை இழப்பு பாதிப்பு ஏற்படவில்லை.
மெட்ராஸ் ஐ பாதிப்பானது கண்ணின் முன்பகுதியான வெள்ளைப் படலத்தில் வைரஸ் கிருமியினால் ஏற்படும் ஒரு கண் நோய்.
மெட்ராஸ் ஐ பாதிப்பு இருப்பவர்களிடம் இருந்து வைரஸ் மாதிரிகளை எடுத்து கிண்டியில் உள்ள பிசிஆர் ஆய்வகத்தில் பரிசோதித்ததில் அடினோ மற்றும் என்ரோ என்ற வைரஸ் தாக்குதலால் மெட்ராஸ் ஐ பாதிப்பு ஏற்படுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கண்ணில் உறுத்தல், சிவந்த நிறம், அதிக கண்ணீர் வடிதல், கண் அரிப்பு, கண் வீக்கம், கண்ணில் அடிக்கடி அழுக்கு சேருவது போன்ற அறிகுறிகள் தென்படும்.
இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் கைகளால் கண்களைத் தொட்டுத் தேய்க்கக் கூடாது. காரணம் கண்களைத் தொட்டுவிட்டு மற்றவர்களைத் தொட்டால் அவர்களுக்கு மெட்ராஸ் ஐ பாதிப்பு ஏற்படும்.
மெட்ராஸ் ஐ எளிதில் பரவக்கூடிய ஒரு தொற்று நோய். எனவே இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
நோய் பாதிப்பு ஏற்பட்ட அடுத்த மூன்று நாட்களுக்கு அலுவலகங்கள், பள்ளிகள், வணிக வளாகங்கள், மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
இந்த நோய் பாதிக்கப்பட்டவர்கள் மருந்தகங்களுக்குச் சென்று தாங்களாகவே கண் சொட்டு மருந்துகளை வாங்கிப் பயன்படுத்தக் கூடாது.
முறையாகக் கண் மருத்துவரை அணுகி, மருத்துவரின் பரிந்துரையின் அடிப்படையில் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

கண் நோய்க்கு பயன்படுத்தப்படும் மருந்தின் தன்மை ஒவ்வொரு மருந்திற்கும், நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மாறுபடும்.
எனவே மக்கள் தாங்களாகவே ஏதாவது ஒரு மருந்தைப் பயன்படுத்தினால் கருவிழி பாதிக்கப்பட்டு பார்வை இழக்கும் அபாயம் ஏற்படும்.
வீட்டில் கண் நோய் பாதிக்கப்பட்ட ஒருவர் பயன்படுத்திய மருந்தினை மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது. பாதிப்பு ஏற்பட்ட நபர்கள் தனித்தனியாக மருத்துவரை அணுகி மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும்.
தற்போது நவம்பர் இறுதியில் இருக்கிறோம். டிசம்பர் முதல் வாரம் வரை மெட்ராஸ் ஐ பாதிப்பு இருக்கும். அதன் பிறகு மெட்ராஸ் ஐ பாதிப்பு நீங்கிவிடும்” என்றார்.
மோனிஷா
தமிழகத்தில் சட்டவிரோத வாகனப் பதிவு: போக்குவரத்துத் துறை அதிரடி!
விஜய் ஹசாரா தொடர்: 5 சதமடித்து அசத்திய தமிழக வீரர்!