நடிகர் ஒய்.ஜி மகேந்திரனின் மகள் மதுவந்தி வீடு ஏலம் விடப்பட்ட நிலையில், அவரது வீட்டில் இருந்த பொருட்களை மீட்டுத் தரும்படி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
நடிகர் ஒய்.ஜி மகேந்திரனின் மகள் மதுவந்தி, பாஜக மாநில செயற்குழு உறுப்பினராக இருக்கிறார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு இந்துஜா லேலாண்ட் பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் வாங்கியுள்ளார்.
வாங்கிய கடன், அதற்குரிய வட்டி என 1 கோடியே 21 லட்சத்து 30,867 ரூபாயை கட்ட தவறியதால், பைனான்ஸ் நிறுவனம் நீதிமன்றத்தை நாடியது.
ஆழ்வார்பேட்டையில் உள்ள மதுவந்திக்கு சொந்தமான வீட்டை பூட்டி சீல் வைக்க சென்னை மெட்ரோபாலிட்டன் அல்லிக்குளம் நீதிமன்றத்தில் பைனான்ஸ் நிறுவனத்தினர் அனுமதி பெற்றனர்.
நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் வினோத் குமார் தேனாம்பேட்டை போலீசார் முன்னிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 13ம் தேதி மது வந்தி வீட்டை சீல் வைத்து அதன் சாவியை பைனான்ஸ் நிறுவன மண்டல மேலாளர் உமாசங்கரிடம் ஒப்படைத்தனர்.

இந்நிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்ட வீட்டில் மதுவந்தியின் பொருட்களை ஒரு மாதத்திற்குள் எடுக்க நோட்டீஸ் கொடுத்தனர். ஆனால் அவர் தனது பொருட்களை எடுக்கவில்லை.
இதனால் பைனான்ஸ் நிறுவனம் மது வந்தியின் பொருட்களை அவருக்கு சொந்தமான இடத்தில் வைத்துள்ளனர். அந்த வீட்டை பைனான்ஸ் நிறுவனம் ஏலம் மூலம் மற்றொருவருக்கு விற்று விட்டதாக கூறப்படுகிறது.
இந்த தகவல் நேற்று மதுவந்திக்கு தெரியவந்துள்ளது. பைனான்ஸ் கடன் சம்பந்தமான வழக்கு நிலுவையில் உள்ளபோது, தான் ஊரில் இல்லாததை அறிந்து பைனான்ஸ் கம்பெனியின் மண்டல மேலாளர் உமா சங்கர் மற்றும் கார்த்திகேயன் மற்றும் 10 நபர்கள் இச்சம்பவத்தில் ஈடுபட்டிருப்பதாகவும்,
அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை மீட்டுத் தரும்படி மதுவந்தி சார்பில் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கலை. ரா
குத்தாட்டம் போட்ட பெண் போலீசார்கள்: சஸ்பெண்ட் செய்த எஸ்.பி
தங்கம் : விலை குறைந்தும் மகிழ்ச்சி இல்லை!