மாடம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் நாட்டு வெடிகுண்டு வீசி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மாடம்பாக்கம் ஊராட்சி மன்றதலைவர் வெங்கடேசன். இவர் அப்பகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.
இந்தநிலையில், நேற்று(நவம்பர் 17) இரவு 10.15மணியளவில் மாடம்பாக்கம் அருகே ஆதனூர் பகுதியில் உள்ள ராகவேந்திரா நகர் பாலம் அருகே வெங்கடேசன் மற்றும் மாடம்பாக்கம் மூன்றாவது வார்டுஉறுப்பினர் சத்யா ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அவர்களை பின்தொடர்ந்து வந்த மர்மகும்பல் வெங்கடேசன் மற்றும் சத்யா மீது மூன்று நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளனர். அதில் இரண்டு குண்டுகள் வெடிக்காமல் ஒரு நாட்டு வெடிகுண்டு மட்டும் வெடித்துள்ளது.
இதனால் வெங்கடேசன் மற்றும் சத்யா ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்திலிருந்து கீழேவிழுந்து ஆளுக்கொருபுறம் ஓடியுள்ளனர். வெங்கடேசனை பின்தொடர்ந்து சென்ற மர்மகும்பல் அவரது தலை, கழுத்து பகுதிகளில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர். இதனால் ரத்தவெள்ளத்தில் வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணிமங்கலம் போலீசார் வெங்கடேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வெங்கடேசன் படுகொலை முன்விரோதம் காரணமாக நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஊராட்சி மன்றதலைவர் படுகொலை செய்யப்பட்டதால் மாடம்பாக்கம் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை உருவாக்கி உள்ளது.
கடந்தவருடம் மாடம்பாக்கம் பகுதியில் வசித்து வரும் சதாம் மற்றும் அவரது சகோதரர்கள் சேர்ந்து வெங்கடேசனை கொலை செய்ய முயற்சித்தனர்.
தலை மற்றும் கை, கால்களில் சிறிய வெட்டுக்காயங்களுடன் வெங்கடேசன் உயிர் தப்பினார். இந்நிலையில், சதாம் மற்றும் அவரது சகோதரர்களிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
செல்வம்
ராஜீவ் கொலை: மறு சீராய்வு மனுவில் உள்ளது என்ன?
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க..!