“தரமான கேன் வாட்டர் விற்பனையாகிறதா?”:மா.சுப்பிரமணியன் உத்தரவு!

மக்கள் நல்வாழ்வுத் துறை, சுகாதாரத்துறை மாவட்ட அலுவலர்கள், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று (ஏப்ரல் 28) நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,

“இந்த ஆண்டு மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்பைத் தடுக்கும் பொருட்டு இதய பாதுகாப்பு மருந்துகள், ’emergency loading dose’ அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அனைத்து துணை சுகாதார நிலையங்களிலும் மருந்து இருப்பு வைக்கப்பட உள்ளது.

அதனை மாவட்ட நல அலுவலர்கள் உறுதிப்படுத்தி மக்களுக்கு மாரடைப்பு அறிகுறி ஏற்பட்டால் உடனடியாக மருந்துகளை வழங்க வேண்டும்.

தாய் இறப்பு விகிதம், குழந்தை இறப்பு விகிதத்தில் அதிக கவனம் செலுத்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

மிக விரைவில் முதலமைச்சர் 500 மருத்துவமனைகளைத் திறந்து வைக்க உள்ளார். இந்த மருத்துவமனைகளுக்குத் தேவையான மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

உணவுப் பாதுகாப்பை பொறுத்தவரைத் தமிழ்நாடு முன்னேறி வருகிறது. கோடைக் காலம் என்பதால் வியாபாரிகள் பழங்களை ரசாயனத்தை கொண்டு பழுக்க வைக்கிறார்கள். அதைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குடிநீர் மாதிரிகளை எடுத்து, தரமான குடிநீர் தான் பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும். போலியான குளிர்பானங்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதையும் கண்காணிக்க வேண்டும்.

அலுவலர்கள் ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு அவரவர் சார்ந்திருக்கும் மாவட்டங்களில் துறை சார்ந்த அலுவலர்களுடன் அனைத்து கடைகளுக்கும் சென்று பான்பராக், குட்கா போன்ற பொருட்கள் இல்லை என்பதை உறுதி செய்திட வேண்டும். குட்கா தடையை மீறும் கடை உரிமையாளர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சரிடம் தமிழ்நாட்டிற்கு 30 புதிய செவிலியர் பயிற்சி கல்லூரிகள் வேண்டும் என்று கேட்டிருந்தோம். அந்த கோரிக்கையை ஏற்றுத் தமிழ்நாட்டிற்கு தலா 10 கோடி மதிப்பீட்டில் 11 புதிய செவிலியர்கள் பயிற்சி கல்லூரிகள் கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

மோனிஷா

பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு சாதகமான தீர்ப்பு!

தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டது சரியா?: அண்ணாமலை பதில்

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts