போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அனைத்து செவிலியர்களுக்கும் பணி உத்தரவாதம் வழங்கப்படும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ள நிலையில் செவிலியர்கள் போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளார்கள்.
கொரோனா காலத்தில் பணி நியமனம் செய்யப்பட்ட செவிலியர்கள் டிசம்பர் 31 ஆம் தேதி முதல் வேலைக்கு வர வேண்டாம் என டிசம்பர் 30 ஆம் தேதி இரவு தமிழக அரசு அறிவித்தது.
இந்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்த செவிலியர்கள் டிசம்பர் 31 ஆம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பணி நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்களுக்கு மாற்றுப் பணி வழங்கப்படும் என்று அறிவித்தார்.
எனினும் செவிலியர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெறவில்லை.
இந்நிலையில் இன்று (ஜனவரி 7) மாலை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர்களைச் சந்தித்துப் பேசவுள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியிருந்தார்.
அதன்படி செவிலியர்களைச் சந்தித்துப் பேசிய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, “2,570 செவிலியர்கள் தற்காலிக பணி நியமனம் குறித்து ஒரு அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி, ’2,570 செவிலியர்கள் 6 மாத காலத்திற்கு என்.எச்.எம் நிதி ஆதாரத்தின் கீழ் ரூ. 14,000 ஊதியத்துடன் தற்காலிக பணி நியமனம் செய்யப்படுவார்கள்’ என்ற அரசாணையை 2020 ஏப்ரல் 28 ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டு 2,300 செவிலியர்கள் பணியில் அமர்த்தப்பட்டார்கள்.
அன்று முதல் அவர்கள் தமிழகத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனையில் தற்காலிக பணியாளர்களாக பணிபுரிந்து வந்தனர். ஒவ்வொரு ஆறு மாதமும் பணி நீட்டிப்பு செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் பேரிடர் முடிவுக்கு வந்த சூழலில் அவர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் தற்காலிகமாகப் பணி நியமனம் செய்யப்பட்ட செவிலியர்களின் கோரிக்கையை ஏற்று முதல்வர் மு.க. ஸ்டாலின் மாற்று ஏற்பாடாகத் தமிழகத்தில் உள்ள ஆரம்பச் சுகாதார நிலையம் மற்றும் மக்களைத் தேடி மருத்துவம் மற்றும் நகர்ப்புற நலவாழ்வு மையம் ஆகிய துறைகளில் இருக்கிற காலிப்பணியிடங்களை இவர்களைக் கொண்டு நிரப்பிக் கொள்ளலாம் என கூறினார்.
அந்த வகையில் அறிவிப்பும் வெளியிடப்பட்டது. இதுவரை 14 ஆயிரம் ரூபாய் சம்பளமாகப் பெற்ற தற்காலிக செவிலியர்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் பணி நியமனம் செய்யப்பட்டால் 18 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் கிடைக்கும்.
அதுமட்டுமில்லாமல், ஏற்கனவே இருக்கும் தற்காலிக பணி நியமனம் செய்யப்பட்ட செவிலியர்கள் தலைமை மருத்துவமனையில் தான் பணிபுரிந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களும் கூட பல்வேறு மனுக்களின் வாயிலாக அவர்களது சொந்த ஊர்களுக்குப் பக்கத்தில் இருக்கக்கூடிய மருத்துவமனைகளில் பணிமாற்றம் வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தனர்.
ஆனால் தற்காலிக செவிலியர்களை பணிமாற்றம் செய்ய முடியாது என்பதால், அவர்களது கோரிக்கையை ஏற்க முடியாமலேயே இருந்தது. இந்நிலையில் ஒரு நல்ல வாய்ப்பாக அவர்களுக்கு என்.எச்.எம் நிதி ஆதாரத்தின் மூலம் இந்த பணி நியமனங்கள் மிகப்பெரிய பணி பாதுகாப்பாக இருக்கும் என்று சொல்லப்பட்டது.
இந்நிலையில் செவிலியர்கள் எங்களுக்கு ஏற்கனவே இருப்பது போன்று ஒப்பந்த பணியாளர்கள் அடிப்படையிலேயே பணி புரிய வழிவகை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார்கள். தொடர்ச்சியாகப் போராட்டங்களையும் நடத்தி வந்தார்கள்.

இன்று சங்கத்தின் நிர்வாகிகளை அழைத்து சுமார் 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். அவர்களுக்கு தனித்தனியாக வழங்கப்பட்ட அப்பாயின்மெண்ட் ஆர்டரை எங்களிடம் காட்டினார்கள். அதில் கொரோனா பேரிடர் காரணமாகத் தற்காலிக செவிலியர்களாகப் பணி நியமனம் செய்யப்படுகிறது என்று தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நானும் உயர் அதிகாரிகளும் நீண்ட நேரம் அவர்களுடன் பேசினோம். அவர்கள் என்.எச்.எம் நிதி ஆதாரத்தின் கீழ் பணி நியமனம் வேண்டாம். ஒப்பந்த செவிலியர்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள்.
கொரோனா பேரிடர் தற்போது இல்லை என்பதால் ஒப்பந்த செவிலியர்கள் அடிப்படையில் பணி நிரந்தரம் செய்ய முடியாது என்று அதிகாரிகள் விளக்கிக் கூறினார்கள். ஆனால் அவர்களும் என்.எச்.எம் நிதி ஆதாரத்தின் கீழ் பணி நியமனம் வேண்டாம். நேரடியாகத் தமிழக அரசு மூலம் பணி நியமனம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்கள்.
மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தலைமையில் ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பும் போது நீங்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். உங்கள் அனைவருக்கும் பணி உத்தரவாதம் தருகிறோம் என்று கூறியுள்ளோம். அவர்களும் யோசிப்பார்கள் என்று நம்புகிறோம்” என்று கூறினார்.
இதனிடையே அமைச்சர் மா. சுப்பிரமணியன் உடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் போராட்டம் தொடரும் என்று செவிலியர்கள் அறிவித்துள்ளனர்.
மோனிஷா