சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக 2ஆவது முறையாக பதவியேற்றார் நீதிபதி எம்.துரைசாமி.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனீஷ்வர்நாத் பண்டாரி நேற்றுடன்(செப்டம்பர் 12) பணி ஓய்வு பெற்றார்.
இந்நிலையில் பொறுப்பு நீதிபதியாக எம்.துரைசாமியை நியமிக்கலாம் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்திருந்தனர்.
இதையடுத்து, உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி எம். துரைசாமியை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி இன்று(செப்டம்பர் 13), நீதிபதி துரைசாமி பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார்.
தலைமை நீதிபதியின் நீதிமன்ற அறையில் நீதிபதி சுந்தர்மோகனுடன் இணைந்து பொதுநல வழக்குகள் உள்ளிட்ட தலைமை நீதிபதி விசாரிக்கும் வழக்குகளை விசாரிக்க துவங்கியிருக்கிறார்.
முந்தைய தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, இடமாற்றம் செய்யப்பட்ட போது பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்த நீதிபதி துரைசாமி, தற்போது இரண்டாவது முறையாக பொறுப்பு தலைமை நீதிபதி பொறுப்பை ஏற்றுள்ளார். அவர், செப்டம்பர் 21ம் தேதியுடன் பணி ஓய்வு பெறுகிறார்.
அண்மையில் அதிமுக பொதுக்குழுவை செல்லாது என்று தனி நீதிபதி ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து 2 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்தது. அதில் ஒருவர் தான் தற்போது பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள நீதிபதி எம். துரைசாமி என்பது குறிப்பிடத்தக்கது.
கலை.ரா