பட்டியலினத்தவர் கோயிலுக்குள் செல்ல அனுமதி: உயர்நீதிமன்றம் அதிரடி!

தமிழகம்

பட்டியல் இன மக்கள் கோவிலுக்குள் சென்று வழிபாடு நடத்த  உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மணி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் காவளபட்டி ஊராட்சிக்குட்பட்ட சித்தரேவு கிராமத்தில் 250க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

இந்த  சித்தரேவு கிராமத்தில் உச்சி காளியம்மன் கோயில், செல்வ விநாயகர் கோயிலில் பொது மக்கள் வழிபாடு நடத்தி வந்தனர்.

கடந்த பத்து வருட காலமாக  பட்டியல் இன மக்கள் கோயிலுக்குள் சென்று வழிபட விடாமல் உயர் சாதியை சேர்ந்த சிலர் தீண்டாமையை கடைபிடித்து வருகின்றனர். இதனை கண்டித்து  பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பாக பலமுறை அமைதி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. ஆனால் உரிய முடிவு எடுக்கப்படவில்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டம் கொடுத்துள்ள உரிமையை மறுக்கக்கூடிய செயல்.  

கடவுள் வழிபாடு என்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை கடமையாகும். இதனை எதிர்க்கும் விதமாக உயர் சாதியினர் செயல்பட்டு வருகின்றனர்.  

தீண்டாமையை கடைபிடிக்கும் இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் சமூக மக்கள் வழிபாடு செய்ய அனுமதித்து உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன் சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று(நவம்பர் 4) விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசின்  மூத்த வழக்கறிஞர் திலக்குமார் ஆஜராகி கடவுள் அனைவருக்கும் பொதுவானவர். சாமி கும்பிடுவதில் எந்த பாகுபாடும் பார்க்கக் கூடாது என்பதில் அரசு தெளிவாக உள்ளது.

இதுபோன்று சட்டத்தை மீறுபவர்கள்  மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே இந்த விவகாரத்தில் அரசு  உரிய நடவடிக்கை எடுக்கும் என நீதிபதிகளிடம் தெரிவித்தார்.

இதனை பதிவு செய்த நீதிபதிகள் பட்டியல் இன மக்கள் செல்வ விநாயகர் மற்றும் உச்சி காளியம்மன் கோயிலுக்குள் சென்று வழிபட அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தனர்.

மேலும் இந்த விவகாரம் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர்சாதி வகுப்பைச் சேர்ந்த மோதில் ராம், சின்னச்சாமி,  ராமசாமி  ஆகியோர் எழுத்துப்பூர்வமான பதிலை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளனர்.

கலை.ரா

ஆதார் இல்லாததால் கர்ப்பிணிக்கு நேர்ந்த கொடூரம்!      

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *