தென் கிழக்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று (ஜனவரி 27) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாத இறுதியில் துவங்கியது. நவம்பர் மாத துவக்கத்தில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்த நிலையில், டிசம்பர் மாதத்தில் கடந்த ஆண்டை காட்டிலும் குறைவாகவே மழை பெய்தது.
இந்தநிலையில் கடந்த இரண்டு வாரங்ளுக்கு முன்னதாக வட கிழக்கு பருவமழை நிறைவடைந்தது. இதனால் தமிழகம் முழுவதும் வறண்ட வானிலை நிலவி வந்தது. அதிகாலையில் பனிப்பொழிவு ஏற்பட்டது.
குறிப்பாக நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் உறைபனி ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகினர்.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மிதமான மழை பெய்து வருகிறது.

இந்தநிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் ஜனவரி 28 முதல் ஜனவரி 30 வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று முதல் ஜனவரி 30-ஆம் தேதி தென் கிழக்கு வங்க கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 55 கி.மீ வேகத்தில் பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும்.
இதனால் இலங்கையை ஒட்டியுள்ள தெற்கு வங்க கடல் பகுதியில் இன்று முதல் ஜனவரி 30 வரை மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு ஆளுநர் கொடுத்த டீ… ஆவி பறக்கும் திமுக கூட்டணி!