வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. heavy rain for 9 districts in tamilnadu
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் இன்று முதல் நவம்பர் 21 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இன்று (நவம்பர் 15) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை 8.30 மணி அளவில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, விசாகப்பட்டினத்திலிருந்து சுமார் 510 கிலோ மீட்டர் தென்கிழக்கே நிலை கொண்டுள்ளது.
இது வடமேற்கு திசையில் நகர்ந்து 16ஆம் தேதி வாக்கில் ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு- வடகிழக்கு திசையில் திரும்பி ஒரிசா கடலோர பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 17ஆம் தேதி வாக்கில் நிலவக்கூடும். இது 18ஆம் தேதி காலை வடக்கு ஒரிசா – மேற்கு வங்க கடலோரப்பகுதிகளில் நிலவக் கூடும்.
இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,
இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
சென்னையில் வானிலை நிலவரம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 27-28 செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
இன்று மற்றும் நாளை, தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
இன்று மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
நாளை வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மத்தியமேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள், வடக்கு ஆந்திர- ஒரிசா கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேற்கண்ட நாட்களில் மீனவர்கள் குறிப்பிடப்பட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. heavy rain for 9 districts in tamilnadu
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
‘மைலாஞ்சி’: ‘அஜயன் பாலாவின் மைலாஞ்சி’ ஆனது ஏன்?
IND vs NZ: ‘டாஸ்’ பாதிப்பை ஏற்படுத்துமா? ரோகித் சர்மா கூறுவது என்ன?