வங்கக்கடலில் நாளை (டிசம்பர் 7) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவில்பட்டி (தூத்துக்குடி), தென்பரநாடு (திருச்சிராப்பள்ளி) தலா 3 செ.மீ மழையும், குறைந்தபட்சமாக கழுகுமலை (தூத்துக்குடி), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), சிவகிரி (தென்காசி), வைப்பாறு (தூத்துக்குடி), அம்மாபேட்டை (ஈரோடு), எடப்பாடி (சேலம்), வெம்பக்கோட்டை (விருதுநகர்) தலா 1 செ.மீ மழையும் பெய்தது.
வெப்பநிலையை பொறுத்தவரை அதிகபட்சமாக ஈரோடு மற்றும் கரூர் பரமத்தியில் 34.0° செல்சியஸூம், குறைந்தபட்ச வெப்பநிலையாக ஈரோட்டில் 18.0° செல்சியஸ் பதிவானது.
இந்நிலையில் இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” இன்று (06-12-2024) பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக, டிசம்பர் 7ஆம் தேதி , தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, 12 -ஆம் தேதி வாக்கில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை தமிழகம் கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.
06-12-2024 முதல் 10-12-2024 வரை: தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
11-12-2024: கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள், காரைக்கால் பகுதியில் ஒரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
வங்கக்கடல் பகுதிகள்:
07-12-2024: தென்கிழக்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென” கூறப்பட்டுள்ளது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
அதானியை ஸ்டாலின் சந்திக்கவும் இல்லை, ஒப்பந்தமும் போடவில்லை – செந்தில் பாலாஜி விளக்கம்!
ஸ்மார்ட் மீட்டர்: அதானி குழுமத்துடன் ஒப்பந்தமா? – தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி!