குஜராத்தின் குறைந்த விலை பம்ப் செட்டுகள்: தடுமாறும் கோயம்புத்தூர்!

Published On:

| By christopher

கோவை மாவட்டத்துக்குப் போட்டியாக குஜராத் மாநிலத்தில் மோட்டார் பம்ப் செட்டுகள் தயாரிக்கப்பட்டு குறைவான விலைக்கு விற்பனை செய்யப்படுவதால் கோயம்புத்தூரில் பம்பு செட் தொழில் சரிவடைந்து வருகிறது.

நம் நாட்டில் உற்பத்தியாகும் பம்ப் செட்டுகளில் 60 சதவிகிதம் கோவை மாவட்டத்தில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது.

பெரு நிறுவனங்கள் மட்டுமல்லாமல், சுமார் 3,000 குறு, சிறு மற்றும் நடுத்தர பம்ப் உற்பத்தி மற்றும் உதிரிப்பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் கோவையில் உள்ளன. சுமார் ஒரு லட்சம் பேர் இந்தத் தொழிலை நம்பியுள்ளனர்.

முன்பு  தினசரி 25,000 முதல் 30,000 மோட்டார் பம்ப் செட்டுகள்  உற்பத்தி செய்யப்பட்டு வந்தன. இதன் மூலம் நாளொன்றுக்கு சுமார் 50 கோடி ரூபாய் வரை வியாபாரம் நடந்தது.

ஆனால், இந்த எண்ணிக்கை, கடந்த சில ஆண்டுகளாக பாதிக்கும் மேல் குறைந்துவிட்டது. மின்வெட்டு, பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி, கொரோனா வைரஸ் நெருக்கடிகள் ஒருபக்கம்.

மறுபக்கம் கோவைக்கு போட்டியாக குஜராத் மாநிலத்திலும் விலை குறைவான மோட்டார் பம்ப் செட்டுகள் தயாரிக்கப்படுகின்றன.

“பொதுவாக, கோடைக்காலத்தில் பம்ப் செட் தேவை அதிகம் இருக்கும். அதன்படி, இந்த ஆண்டு பம்ப் செட் விற்பனை சற்றே சூடுபிடிக்க தொடங்கியது.

இதனிடையே கடந்த சில வாரங்களாக பெய்யும் கனமழை காரணமாக பம்ப் செட் விற்பனை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நெருக்கடிகள், மந்தநிலை விலகி, இப்போதுதான் பம்ப் செட் சந்தை சற்று மீண்டது.

இந்த நிலையில் கோவைக்கு போட்டியாக, குஜராத் மாநிலத்திலும் விலை குறைவான மோட்டார் பம்ப் செட்டுகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன.

இதன் காரணமாக கோவையில் தயாராகும் பம்ப் செட் தேவை கணிசமாக குறைந்துவிட்டது. இதனால் பம்ப் செட் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

பல இடங்களில் தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இதேநிலை தொடர்ந்தால் நாங்கள் வேறு தொழிலை நோக்கித்தான் செல்ல வேண்டும்” என்று தொழில்துறையினர் வேதனை தெரிவிக்கின்றனர்.

மின்வாரிய ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு!

கிச்சன் கீர்த்தனா: ஹெர்பல் காக்டெய்ல்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.