தமிழகத்தில் சில பகுதிகளில் இன்று முதல் (ஆகஸ்ட் 18) லாரி உரிமையாளர்கள் காலவறையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
தமிழகத்தில் ஆயிரக்கணக்கான கல் மற்றும் எம் சாண்ட் குவாரிகள், கிராவல் குவாரிகள், அரசு மணல் விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த குவாரிகளில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான லாரிகள் இயக்கப்படுகின்றன. ஆனால் குவாரிகளில் இருந்து இயக்கப்படும் லாரிகளில் விதிகளை மீறி அதிக பாரங்களை ஏற்றுவதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
அதிக பாரம் ஏற்ற மாட்டோம்
இது குறித்து, கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி சிங்கப்பெருமாள் கோவிலில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் யுவராஜ் கூறியது, “நாங்கள் லாரிகளில் அதிக பாரம் ஏற்ற மாட்டோம். அதிக பாரம் ஏற்றும் சில நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், கனிமவள அதிகாரிகள், அமைச்சர் என அனைவரையும் சந்தித்து கோரிக்கை வைத்தும் யாரும் எங்களது கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகள் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ரூ. 5 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை அபராதம் செலுத்துகின்றனர். அதிக பாரத்துடன் லாரிகளை ஓட்டக் கூடாது என்று நினைப்பவர்கள் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதிக பாரத்தால் சாலை விபத்துகள்
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகளவு சாலை விபத்துக்கள் ஏற்படுகின்றது. தமிழகத்தில் ஏற்படும் சாலை விபத்துகளுக்கு லாரிகளில் அதிக பாரம் ஏற்றுவதே காரணமாக இருக்கின்றது.
அதிக பாரம் ஏற்றிய லாரிகள் மூலம் சாலையில் விபத்து ஏற்பட்டால், காப்பீடு செய்திருந்தாலும் லாரி உரிமையாளர்கள் தான் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
அத்தகைய லாரிகள் மீது போக்குவரத்து துறை, வருவாய் துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்காமல் விட்டு விடுகின்றனர்.
தமிழக அரசின் கவனத்திற்காக
மேலும், தமிழகத்தில் உரிய அனுமதியின்றி 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எம் சாண்ட் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் நடக்கின்ற முறைகேடுகளை கண்டறிய தனி குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும்.
மேற்கண்ட விவகாரங்களை தமிழக அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்வதற்காக காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றோம்” என்று கூறினார்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கவன ஈர்ப்பு ஆர்பாட்டமும் நடத்தப்படும் என்றும் கூறினார்.
இதனை தொடர்ந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் இன்று முதல் நிறுத்தப்படுகின்றன.
மோனிஷா
அதிக மணல் லோடு: மோதிக் கொள்ளும் லாரி உரிமையாளர்கள்!