ஓணம் பண்டிகையை முன்னிட்டு நாளை சென்னைக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மலையாள மொழி மக்களால் ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகை வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆவணி மாதம் அஸ்தம் நாளில் தொடங்கி திருவோணம் வரை இந்த பண்டிகை கொண்டாடப்படும்.
இந்த பண்டிகையை தமிழ்நாடு, கர்நாடகா என அண்டை மாநில மக்களும் கொண்டாடி வருகின்றனர்.
குறிப்பாகக் கன்னியாகுமரி, கோவை நீலகிரி என கேரளாவை ஒட்டியுள்ள மாவட்ட மக்கள் இந்த பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடுவார்கள்.
ஓணத்தை முன்னிட்டு ஏற்கனவே நீலகிரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. நாளை ஓணம் பண்டிகையைக் கொண்டாட விடுமுறை அறிவித்த மாவட்ட நிர்வாகம் செப்டம்பர் 16ஆம் தேதி வேலை நாளாக அறிவித்துள்ளது.
அதுபோன்று சென்னைக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை மாவட்டத்திற்கு அரசு ஆணைப்படி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. மேற்படி உள்ளூர் விடுமுறைக்குப் பதில் 02.09.2023 சனிக்கிழமை அன்று சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பணி நாளாக அறிவிக்கப்படுகின்றது.
ஆயினும் உள்ளூர் விடுமுறை நாளான 29.08.2023 அன்று அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு சென்னை மாவட்டத்தில் உள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களைக் கொண்டு பொது மக்களுக்குச் சிரமம் ஏற்படாதவாறு செயல்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரியா
சூரியனுக்காக செல்லும் ஆதித்யா எல்1: தேதி குறித்த இஸ்ரோ!
பிரக்ஞானந்தா பெற்றோருக்கு கார் பரிசளிக்கும் ஆனந்த் மஹிந்திரா
இயக்குராக அறிமுகமாகிறார் நடிகர் விஜய் மகன் சஞ்சய்