கடலூரில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது போதையில் இருந்த நபர் தாக்குதல் நடத்தியுள்ளார்.
குற்றங்கள் மற்றும் விபத்துகளை தடுக்க தமிழக போலீசார் பகல் மற்றும் இரவு நேரங்களில் வாகன சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அப்படித்தான் இன்று (நவம்பர் 6) அதிகாலை 1 மணியளவில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் மீன்சுருட்டி குமாராட்சி NH81 சர்வீஸ் சாலையில், தலைமை காவலர் ஜெயராமன், முதுநிலை காவலர் தேவநாதன் ஆகிய இரு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பஜாஜ் ப்ளாட்டினா இருசக்கர வாகனத்தில் (PY05 vb7484) காட்டுமன்னார்கோயில் நோக்கி சென்று கொண்டிருந்த ஒருவரை மறித்த போலீசார் ஆவணங்களை சரிபார்த்தனர். அவர் புதுச்சேரி மாநிலம் வில்லியனூரை அடுத்து கிளிஞ்சிகுப்பத்தைச் சேர்ந்தவர் என்பதும் அவர் பெயர் விஸ்வநாதன் என்பதும் தெரியவந்தது அந்த நபர் குடிபோதையில் இருந்துள்ளார்.
போலீசாருக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த போலீஸ் ஜெயராமன் அவரை அடித்திருக்கிறார்.
இதனால் ஆத்திரமடைந்த விஸ்வநாதன், தன்னிடமிருந்த இரும்பு கம்பியால் இரண்டு போலீசாரையும் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பித்துவிட்டார்.
இதில் காயமடைந்த போலீசார் சிதம்பரம் அரசு ராஜாமுத்தையா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த தகவல் அறிந்த எஸ்.பி.ராஜாராம் தனது ஸ்பெஷல் டீமான டெல்டா டீமை அனுப்பி குற்றவாளியை பிடிக்க உத்தரவிட்டார்.
டெல்டா டீம் அடிப்பட்ட போலீசாரிடம், விஸ்வநாதனை பற்றி விசாரித்து அவரது முகவரியை தெரிந்துகொண்டனர்.
இதையடுத்து புதுச்சேரி மாநிலம் வில்லியனூரை அடுத்த கிளிஞ்சிக்குப்பத்தில் இருந்த விஸ்வநாதன் வீட்டுக்கு சென்ற போலீசார் காலை 6 மணிக்கு அவரை பிடித்து வந்தனர்.
அவரிடம் விசாரித்துகொண்டிருந்த போது, பயத்தில் கீழே விழுந்ததில் கை முறிவு ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு விஸ்வநாதனுக்கு மாவுகட்டு போடப்பட்டது.
இதையடுத்து குமாராட்சி காவல்நிலையத்தில் விஸ்வநாதன் மீது வழக்குப்பதிவு செய்து ரிமாண்ட் செய்தனர். இவர், மீது புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் ஏதேனும் குற்ற வழக்குகள் இருக்கிறதா என்று போலீசார் ஆராய்ந்ததில் எந்த வழக்கும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
விஸ்வநாதனை பிடித்த டெல்டா டீம் அவரிடம் விசாரித்தபோது, “புதுச்சேரியில் இருந்து காட்டுமன்னார்கோயில் நோக்கி சென்று கொண்டிருந்த போது குமராட்சி சாலையில் போலீசார் மறித்தனர். நான் அனைத்து ஆவணங்களை காட்டிய போதும், என்னை போலீசார் அசிங்கமாக பேசினார்கள். ஏன் இப்படி பேசுகிறீர்கள் என்று கேட்டதற்கு, என்னை தாக்கினார்கள். அப்போது இரவு நேரம் என்பதால் வண்டியில் இருந்த கம்பியால் அவர்களை தாக்கிவிட்டு தப்பிவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வணங்காமுடி
come back செந்தில்பாலாஜி… calm back நிர்வாகிகள்- கள ஆய்வில் நடந்தது என்ன?
‘செயற்கை நுண்ணறிவு’ பயன்பாட்டில் எச்சரிக்கை… ஆஸ்திரேலியா மாநாட்டில் அப்பாவு பேச்சு!