”அடுத்த 1,000 ஆண்டுக்கு அடித்தளம் அமைக்கும் விதமாக இந்த தருணத்திலிருந்து, தெய்வீக இந்தியாவை கட்டியெழுப்ப உறுதிமொழி எடுக்க வேண்டும்” என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
உத்தரபிரதேச அயோத்தியில் ராமர் கோயில் குடமுழுக்கு விழா இன்று (ஜனவரி 22) கோலகலமாக நடைபெற்றது.
இந்த விழாவில் பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அம்மாநில ஆளுநர் ஆனந்தி பென் படேல் உள்ளிட்டோரும், ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், சச்சின், உள்ளிட்ட நாட்டின் முக்கிய பிரபலங்களும் கலந்துகொண்டனர்.
பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதை தொடர்ந்து நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார்.
புதிய காலச்சக்கரம்!
“சியாவர் ராம் சந்திரா” என்று கூறி தனது பேச்சை தொடங்கிய மோடி, ஜனவரி 22, 2024 என்பது காலண்டரில் உள்ள ஒரு தேதி மட்டுமல்ல, ஒரு புதிய காலச்சக்கரத்தின் தோற்றத்தைக் குறிக்கிறது. ராமர் கோயில் கட்டப்பட்டது மக்களுக்கு ஒரு புதிய ஆற்றலை நிரப்பியுள்ளது.
பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும் இந்த தேதியை மக்கள் நினைவில் வைத்திருப்பார்கள். நாம் அதன் சாட்சியாக இருப்பது ராமரின் உயர்ந்த ஆசீர்வாதம்.
பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட அந்த முக்கியமான தருணத்தின் சாட்சியாக இருக்க நான் இங்கு வந்துள்ளேன். குடமுழுக்கின்போது எழுந்த அந்த திவ்ய உணர்வில் என் முழு உயிரும், உடலும் இன்னும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
ராமர் இனி கூடாரத்தில் வாழ மாட்டார்!
நமது பால ராமர் இனி கூடாரத்தில் வாழ மாட்டார். அவர் பிரம்மாண்டமான கோயிலில் வசிப்பார். நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்பு பக்கத்தில் ராமர் வசிக்கிறார்.
இன்று நமது ராமர் வந்து விட்டார். பல வருட காத்திருப்பு, போராட்டம் மற்றும் எண்ணற்ற தியாகங்களுக்குப் பிறகு நம் ராமர் வந்திருக்கிறார். இந்தியாவே இதனை தீபாவளியாக கொண்டாடுகிறது.
இன்று, நான் பகவான் ஸ்ரீராமரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். பல நூற்றாண்டுகளாக இந்த வேலையைச் செய்ய முடியாமல் போனதற்கு, நமது கடின உழைப்பு, தியாகம் மற்றும் தவத்தில் ஏதோ குறை இருந்திருக்க வேண்டும். அந்தக் குறைபாடு இன்று பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. பகவான் ராமர் நம்மை மன்னிப்பார்.
ராமரை வரையறுத்த துறவிகள் அவர் அனைவரிடமும் வாழ்கிறார் என்று கூறியுள்ளனர். ஒவ்வொரு காலகட்டத்திலும் மக்கள் ராமருடன் வாழ்ந்துள்ளனர். ஒவ்வொரு காலத்திலும் உள்ள மக்கள் ராமரை தங்கள் மொழிகளில் வெளிப்படுத்தியுள்ளனர்.
கடந்த 11 நாட்களில், பல்வேறு மொழிகள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து வழங்கப்பட்ட ராமாயணத்தில் மூழ்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்த அனுபவம் மிகவும் ஆழமானது.
இந்திய நீதித்துறைக்கு நன்றி!
அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகும், ராமர் கோயிலுக்காக பல தசாப்தங்களாக சட்டப் போராட்டம் நீடித்தது. நீதி வழங்கிய இந்திய நீதித்துறைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த அங்கீகாரம், சிக்கலான மற்றும் உணர்வுப்பூர்வமான சர்ச்சைகளைத் தீர்ப்பதில், குறிப்பாக ஆழமான கலாச்சார மற்றும் மதத் தாக்கங்களைக் கொண்ட சட்ட செயல்முறையின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
ஆதாரங்களை கவனமாக ஆராய்ந்து, பல்வேறு தரப்பினரின் வாதங்களைக் கேட்டு, இறுதியில் ராமர் கோயில் கட்டுவதற்கு வழிகோலும் தீர்ப்பை வழங்கியதில் நீதித்துறை முக்கியப் பங்காற்றியது. அதனால் ராமர் கோயில் தற்போது சட்டப்படி கட்டப்பட்டுள்ளது.
ராமர் ஒரு பிரச்னை அல்ல!
சிலரால் இந்தியாவின் சமூக உணர்வின் தூய்மையைப் புரிந்து கொள்ள முடியவில்லை. ராமர் கோயில் கட்டினால் தீ மூளும், கலவரம் ஏற்படும் என்று சிலர் கூறுகிறார்கள். ராமர் நெருப்போ, பிரச்சனையோ அல்ல. அவர் தான் ஆற்றலும், தீர்வும் என்பதை அவர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
ராமர் கோயில் கட்டுமானம் இந்திய சமுதாயத்தின் முதிர்ச்சியின் பிரதிபலிப்பு;அமைதி, பொறுமை, பரஸ்பர நல்லிணக்கம் மற்றும் இந்திய சமுதாயத்தின் ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் அடையாளமாக பால ராமரின் கோயில் உள்ளது” என்றார் மோடி.
ஆயிரம் ஆண்டுக்கான இந்தியாவிற்கு அடித்தளம்!
மேலும், “ராமர் கோயிலுக்குப் பிறகு என் அடுத்த இலக்கு என்ன? என்று கேள்வி எழுப்பிய மோடி, ”ஆன்மீக ரீதியில் செழுமையடைந்த மற்றும் வளமான இந்தியாவை வடிவமைக்கும் பொறுப்பு நமக்கு வந்துள்ளது.
இப்போது மகத்தான ஆத்மாக்கள் நம்மை சொர்க்கத்தில் இருந்து இந்தியாவின் கால சக்கரம் மாறுவதை பார்ப்பார்கள் என்ற ஒரு உணர்வு எனக்கு வருகிறது.
இந்த மாற்றத்தை பிரதிநிதித்துவப்படுத்த எங்கள் தலைமுறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதனால்தான் இது சரியான நேரம் என்று நான் சொல்கிறேன்.
அடுத்த 1,000 ஆண்டுகளுக்கான இந்தியாவிற்கு நாம் இப்போது அடித்தளம் அமைக்க வேண்டும். இந்த தருணத்திலிருந்து, சுயசார்பு மட்டுமல்ல, சிறந்த மகத்துவம் மற்றும் தெய்வீக இந்தியாவை கட்டியெழுப்ப உறுதிமொழி எடுப்போம்” என்று பிரதமர் மோடி பேசினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
“இது ஒரு புதிய கால சக்கரத்தின் தோற்றம்” : அயோத்தியில் மோடி உரை!
‘அரிமாபட்டி சக்திவேல்’ பட ஃபர்ஸ்ட் லுக்கில் அம்பேத்கரும் பெரியாரும்