மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் வனத்துறை சார்பாக 10 குழுக்கள் இன்று (ஏப்ரல் 4) அமைக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏப்ரல் 2ஆம் தேதி இரவு செம்மங்குளம் என்ற பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் சார்பில் புகாரளிக்கப்பட்டது. சிறுத்தையின் கால் தடம் இருப்பதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியில் காவல்துறையினரிடம் புகாரளித்துள்ளனர்.
பொதுமக்களின் புகாரையடுத்து, சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்த காவல்துறையினர் சிறுத்தை நடமாட்டம் இருப்பதை உறுதி செய்தனர்.
தொடர்ந்து, நேற்று (ஏப்ரல் 3) அதிகாலை மீண்டும் செம்மங்குளம் பகுதிக்கு வந்த சிறுத்தை, அங்கு வாய்க்காலில் சுற்றித் திரிந்த பன்றியை கடித்ததால் பதற்றம் அதிகரித்தது.
தொடர்ந்து, சிறுத்தையின் நடமாட்டத்தை சிசிடிவி கேமராக்கள் மூலம் காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர். இதையடுத்து, சிறுத்தை நடமாட்டம் காரணமாக பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், சிறுத்தையின் நடமாட்டம் தென்பட்டால் 9360889724 என்ற எண்ணிற்கு அழைக்கவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுத்தை நடமாட்டம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். காவல்துறையினரும், வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், சிறுத்தையின் நடமாட்டம் தற்போதுவரை தென்படாததால் மாணவர்களின் நலன் கருதி மயிலாடுதுறையில் உள்ள 7 பள்ளிகளுக்கு இன்று (ஏப்ரல் 3) ஒருநாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டிருந்தார்.
தொடர்ந்து, சிறுத்தை பதுங்கி இருப்பதாக கருதப்படும் கூரைநாடு, தெற்கு சாலியத் தெரு, வடக்கு சாலியத் தெரு, மேல ஒத்தசரகு, கீழ ஒத்தசரகு, செங்கழநீர் பிள்ளையார் கோயில் தெரு, பூக்கடைத்தெரு உள்ளிட்ட பகுதிகளிலும், மரங்கள் அடந்த பகுதிகளிலும், பழங்காவிரி கரை பகுதிகளிலும் வனத்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் 10 குழுக்களாக இணைந்து சிறுத்தையை தேடி வருகின்றனர்.
திருச்சியில் இருந்து உதவி வனத்துறை அலுவலர், மதுரையில் இருந்து மயக்க மருந்து செலுத்துவதற்காக வரவழைக்கப்பட்ட மருத்துவக் குழுவினர் உள்ளிட்ட நிபுணர் குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர், மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் சரவணபாபு, கோட்டாட்சியர் வ.யுரேகா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அம்பிகாபதி மற்றும் காவல் ஆய்வாளர் சுப்ரியா உள்ளிட்ட அதிகாரிகள் சிறுத்தையை பாதுகாப்பாக பிடிப்பது குறித்து ஆலோசனை நடத்தினர்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கார்ப்பரேட்களும் பாஜகவும் வலுவாக கரம் கோர்த்துள்ளதன் ரகசியம் என்ன?