தேனியில் சிறுத்தை உயிரிழந்தது தொடர்பாக அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு வனத்துறை சம்மன் அனுப்பியிருக்கிறது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ரவீந்திரநாத்துக்கு சொந்தமாக ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. இதைச்சுற்றி சோலார் மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கடந்த மாதம் 28 ஆம் தேதி ரவீந்திரநாத்துக்கு சொந்தமான தோட்டத்தில் கைலாசப்பட்டி என்ற இடத்தில் சோலார் மின்வேலியில் சிறுத்தை ஒன்று சிக்கி உயிரிழந்தது.
இதுதொடர்பாக ரவீந்திரநாத் தோட்டத்தில் ஆட்டுக்கிடை அமைத்திருந்த அலெக்ஸ் பாண்டியன் மற்றும் தோட்ட மேலாளர்களான தங்கவேல், ராஜவேல் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த வனத்துறை அதிகாரிகள் சிறையில் அடைத்தனர்.

உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் மின்வேலி அமைத்திருக்கும் எம்.பி.ரவீந்திரநாத் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, ஏராளமான விவசாயிகள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
மேலும் ரவீந்திரநாத்தை கைது செய்யக்கோரி தேனி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், பெரியகுளம் எம்.எல்.ஏ சரவணக்குமார், திமுக போடி ஒன்றிய செயலாளர் லட்சுமணன் உள்ளிட்டோர் தேனி மாவட்ட வன அலுவலரிடம் புகார் அளித்தனர்.
மின்வேலியில் சிக்கி சிறுத்தை உயிரிழந்தது தொடர்பாக எம்.பி.ரவீந்திரநாத்தை விசாரிக்க, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு வனத்துறை சார்பில் அண்மையில் கடிதம் எழுதப்பட்டது.
இந்தநிலையில் இதுகுறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ரவீந்திரநாத்துக்கு வனத்துறை அதிகாரிகள் இன்று சம்மன் அனுப்பியுள்ளனர்.
2 வாரத்திற்குள் ரவீந்திரநாத் தேனி மாவட்ட வனத்துறை அலுவலகத்திற்கு வந்து விளக்கம் அளிக்கவேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ரவீந்திரநாத்துடன், தியாகராஜன். காளியப்பன் என்ற மேலும் 2 நில உரிமையாளர்களுக்கும் வனத்துறை சம்மன் அனுப்பி இருக்கிறது.
கலை.ரா
முதல்வர் பயணம்: பாதுகாப்பு காவலர்கள் எண்ணிக்கை குறைப்பு!
தீபாவளி டாஸ்மாக் விற்பனை : அன்புமணி காட்டம்!