பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் அளவிற்கு தமிழ்நாட்டில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (மார்ச் 15) தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக ’இன்புளூயன்சா’ எனப்படும் வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்படுக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இதனையடுத்து 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு நாளை முதல் 26ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் சென்னை வேளச்சேரியில் சிறப்பு மருத்துவ முகாமை இன்று தொடங்கிவைத்த தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம், புதுச்சேரியைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் வைரஸ் காய்ச்சல் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுமா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் பதிலளித்து பேசுகையில், “வைரஸ் காய்ச்சல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் அளவிற்கு தமிழ்நாட்டில் பாதிப்பு இல்லை. எனினும் பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோருக்கு இன்புளூயன்சா பாதிப்பு உள்ளதா என்பதை அறிய 476 நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது” என்று அவர் தெரிவித்தார்.
மேலும் கொரோனாவுக்கு பிறகு இளம் வயதினர் மாரடைப்பு காரணமாக உயிரிழப்பது அதிகரித்துள்ளதாகவும், இதுகுறித்து இதய நிபுணர்கள் ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
கிறிஸ்டோபர் ஜெமா
நாட்டு நாட்டு : ஆஸ்கரும் சர்ச்சையும்!
பிரஷாந்த் கிஷோர் எதற்காக இப்படி செய்கிறார்?: சீமான்