உச்ச நீதிமன்ற நீதிபதியானார் கே.வி.விஸ்வநாதன்

இந்தியா தமிழகம்

தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதன் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.

உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை 34. ஆனால் 32 நீதிபதிகளே பணியிலிருந்த நிலையில், கடந்த மே 16ஆம் தேதி இருவரின் பெயரை கொலிஜியம் பரிந்துரைத்தது.

ஆந்திர உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா, தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதன் ஆகியோரை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், கே.எம்.ஜோசப், அஜய் ராஸ்தோகி, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய கொலிஜியம் பரிந்துரைத்தது.

lawyer KV Viswanathan

இதற்கு மத்திய சட்டத்துறை ஒப்புதல் வழங்கிய நிலையில் இருவரும் இன்று (மே 19) பதவி ஏற்றுக்கொண்டனர். தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இரு நீதிபதிகள் பதவி ஏற்றதன் மூலம், உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை முழு அளவை எட்டியது.

யார் இந்த கே.வி விஸ்வநாதன்

இளம் வயதில் பொள்ளாச்சி ஆரோக்ய மாதா மெட்ரிக் பள்ளி, அமராவதி சைனிக் பள்ளி, உதகை சூசையப்பர் மேல் நிலை பள்ளியில் படித்த கே.வி.விஸ்வநாதன், பின்னர் கோவை சட்டக்கல்லூரியில் 5 ஆண்டுகள் சட்டப்படிப்பை முடித்தார்.

1988ல் தமிழ்நாடு பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவு செய்தார். 1990 – 95 வரை மூத்த வழக்கறிஞர் கே.கே. வேணுகோபாலிடம் ஜூனியராக இருந்தார்.

உச்ச நீதிமன்றத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கறிஞராகப் பணி புரிந்த அவர் 2009ஆம் ஆண்டு மூத்த வழக்கறிஞர் ஆனார்.

மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலாகவும் பணியாற்றி உள்ளார். சிவில், கிரிமினல், அரசியலமைப்பு, ரிட் என பல்வேறு துறை வழக்குகளில் நிபுணத்துவம் பெற்றவர்.

ஒரே பாலின திருமணத்துக்கு அங்கீகாரம் கோரும் வழக்கில் மனுதாரர்களுக்கு ஆதரவாக ஆஜராகி வாதாடி வந்தார்.

இவரது பதவி காலம் 2031 மே 25 வரை உள்ளது. தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவி ஏற்றுள்ள நிலையில், 2031ஆம் ஆண்டில் 9 மாதங்கள் தலைமை நீதிபதியாக இருக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

உச்ச நீதிமன்றத்திற்கு வழக்கறிஞர்கள் பட்டியலிலிருந்து நேரடியாக நியமிக்கப்படுபவர்கள் பட்டியலில் விஸ்வநாதன் பத்தாவது இடத்தை பிடித்துள்ளார். தமிழ்நாட்டை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் உச்ச நீதிமன்றத்திற்கு நேரடியாக நியமிக்கப்பட்டு தலைமை நீதிபதி பதவி வரை செல்லவிருப்பது இதுவே முதன்முறை ஆகும்.

இவரது தந்தை கே.வி.வெங்கட்ராமன் 1991-96 வரை உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கறிஞராக கிரிமினல் வழக்குகளில் ஆஜராகி வாதாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியா

“துயர சம்பவத்திலும் விளம்பரம்” : ஆளுநரை விமர்சித்த முரசொலி

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு காவல்துறையில் பணி!

+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *