”நீதிக்கு நாம் செய்யும் பிழை!” – காவலர்களிடம் கண்டிப்பு காட்டிய முதல்வர்

Published On:

| By Monisha

Law and order advisory meeting

”குற்றவாளிகளைச் சட்டத்தின் வளையத்திற்குள் கொண்டுவரத் தாமதம் ஏற்பட்டால் அது நீதிக்கு நாம் செய்யும் பிழை” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (ஜனவரி 19) சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டம் ஒழுங்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க. பணீந்திர ரெட்டி, டிஜிபி சைலேந்திர பாபு, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், காவல் துறை மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, “தமிழ்நாட்டு மக்களைப் பொருத்தவரை சட்டம் ஒழுங்கிற்குக் கட்டுப்பட்டு நடக்கக்கூடியவர்கள். மத நல்லிணக்கமும் அனைவரிடமும் இணக்கமாக வாழும் தன்மையும் கொண்டவர்கள்.

இந்த சமூக கட்டமைப்பினை பத்திரமாகக் கட்டிக் காக்க வேண்டிய பொறுப்பு உங்கள் கையில் (காவல்துறை) உள்ளது. எந்த விதமான சிறு பிணக்குகளும் மக்களிடம் ஏற்படாதவாறு காவல் ஆணையர்களும், காவல் கண்காணிப்பாளர்களும் மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து மிக கவனமுடன் கடமையாற்ற வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

மாநில நுண்ணறிவு பிரிவு மற்றும் க்யூ பிரிவில் அனுப்பப்பட்டு இருக்கக்கூடிய முக்கிய தகவல்கள் உடனுக்குடன் கள விசாரணை செய்து காவல்துறை தலைமையகத்துடன் முழுமையான ஒருங்கிணைப்போடு காவல் துறை கண்காணிப்பாளர்களும் ஆணையர்களும் செயல்பட வேண்டும்.

குற்ற நிகழ்வுகளின் மீது துரிதமாக விசாரணையை முடித்து விசாரணை அலுவலர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுவதை நீங்கள் கட்டாயம் உறுதி செய்திட வேண்டும். இதற்கு நீங்கள் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதுதான் சட்டத்தின் வளையத்திற்குள் குற்றவாளிகளைக் கொண்டுவர வழிவகுக்கும். இதில் தாமதம் ஏற்பட்டால் அது நீதிக்கு நாம் செய்யும் பிழையாக ஆகிவிடும்.

இந்த பணிகள் சிறப்பாக நடைபெற வேண்டுமென்றால் காவல்துறை அதிகாரிகள் களப்பணிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். சம்பவ இடத்திற்கு உடனடியாக நேரில் சென்று விசாரணை மேற்கொள்ள வேண்டும். காவல் நிலையங்களுக்கும் துணை காவல் நிலையங்களுக்கும் செக் போஸ்டுகளுக்கும் அடிக்கடி சென்று ஆய்வுகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.

அதேபோன்று கிராம மற்றும் நகர மக்கள் அதிகாரிகளோடு அவ்வப்போது கலந்துரையாடி, அவர்களது கருத்துகளைக் கேட்டு மக்களோடு இணைந்து காவல்துறை அவர்களுக்கு உண்மையான நண்பனாக திகழ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கடந்த ஆய்வுக் கூட்டத்தில் நான் உங்களுக்கு அறிவுறுத்திய படி ஒவ்வொரு மாவட்டத்திலும் காவல் நிலைய அளவில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடத்திப் பதியப்பட்ட புகார்களின் மீதான விசாரணைகள் மற்றும் கைதி நடவடிக்கைகள் எந்த நிலையில் உள்ளது என்பதை நீங்கள் கண்காணிக்க வேண்டும்.

ஆய்வுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுரைகள் பின்பற்றப்படாத நிகழ்வுகள் இருக்குமானால் சம்பந்தப்பட்ட காவல் அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேசமயம் சிறப்பாக பணியாற்றக்கூடிய காவல் அலுவலர்களை நீங்கள் ஊக்குவிக்க வேண்டும்.

நான் தெரிவிக்கும் கருத்துகளின் ஒற்றை வரி என்னவென்றால், ‘ மக்களின் நம்பிக்கையை நீங்கள் முழுமையாகப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொள்கிறேன். காவல் நிலையத்திற்குச் சென்றால் நியாயம் கிடைக்கும் என்ற நிலை ஒவ்வொரு காவல் நிலையத்திலும் உருவாக்கப்பட வேண்டும். இதனை காவல்துறை தலைவர் உறுதி செய்திட வேண்டும்.

இதைத் தான் நான் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன். நான் மட்டுமல்ல மக்களும் அதைத் தான் எதிர்பார்க்கிறார்கள். இதை நீங்கள் செய்ய வேண்டும். செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

அடுத்த ஆய்வுக் கூட்டத்தின் போது நல்ல பணி முன்னேற்றங்களை நீங்கள் எடுத்து சொல்ல வேண்டும்” என்று பேசினார்.

மோனிஷா

29 வார கருவை கலைக்க முடியுமா?: உச்ச நீதிமன்றம் கேள்வி!

முதலமைச்சரின் தனிச் செயலாளருக்கு கூடுதல் துறைகள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel