மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த கனியாமூர் தனியார் பள்ளியை மீண்டும் திறக்கக்கோரி பள்ளி நிர்வாகம் அளித்த மனு மீது இன்று (ஆகஸ்ட் 23) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூர் தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்த +2 மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் ஜூலை மாதம் உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து நடந்த போராட்டங்களின் உச்சமாக அரங்கேறிய கலவரத்தில் பள்ளி சூறையாடப்பட்டது.
இதுகுறித்த வழக்கு விசாரணை பல்வேறு திருப்பங்களுடன் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பள்ளியும் திறக்கப்படாத நிலையில் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர்.
பள்ளியை திறக்க கோரி மனு!
இந்நிலையில் மூடப்பட்டு இருக்கும் தனியார் பள்ளியை திறக்க அனுமதி கோரி, அதனை நடத்தி வரும் லதா கல்வி அறக்கட்டளை நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
அதில், 1993ம் ஆண்டு தொடங்கப்பட்ட லதா கல்வி அறக்கட்டளை, சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஈசிஆர் இன்டர்நேஷனல் பள்ளியை நடத்தி வருகிறது.
இரு பள்ளிகளிலும் மொத்தம் 3,500 மாணவர்கள் படித்து வருகின்றனர். சுமார் 225 மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் இங்கு பணியாற்றி வருகின்றனர்.
மாணவி ஸ்ரீமதி உயிரிழந்ததை தொடர்ந்து கனியாமூர் சக்தி மெட்ரிகுலேசன் பள்ளி கடந்த மாதம் 17ம் தேதி சூறையாடப்பட்டது.
அதனை தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், நிர்வாகத்தைச் சேர்ந்த யாரும் பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.
வங்கி கடன்பெற்று பள்ளியை நடத்தி வரும் நிலையில், கலவரத்தால் சுமார் ரூ.25 கோடி அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
மேலும் மாணவர்களுக்கு தற்போது ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் பலரும் அந்த வசதியை பெற முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர்.
எனவே பள்ளியை சரி செய்து, மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்குவதற்கு வசதியாக பள்ளியை மீண்டும் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை!
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் இன்று விசாரணைக்கு வருகிறது.
மாணவி ஸ்ரீமதி உயிரிழப்பு விசாரணை வழக்கில் தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பள்ளி நிர்வாகம் சார்பில் தற்போது மனு அளிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன் மறுப்பு!