சீரியல் நடிகை லஷ்மி வாசுதேவன் தனது புகைப்படங்களை மார்பிங் செய்து சிலர் மிரட்டி வருவதாக கூறி வீடியோ பதிவிட்டுள்ளார்.
சன் டிவியில் ஒளிபரப்பான ஆனந்தம் சீரியல் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை லஷ்மி வாசுதேவன்.
இவர் பல சீரியல் தொடர்களில் அம்மா கதா பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செப்டம்பர் 24 ஆம் தேதி ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.
அதில் அவர், ”என்னுடைய வாட்ஸ் அப் தொடர்பில் இருக்கிறவர்கள் அனைவருக்கும் இந்த செய்தியை தெரிவிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. என்னுடைய புகைப்படத்தை தவறாக மார்பிங் செய்து வேறொரு புது நம்பரிலிருந்து வாட்ஸ் அப் தொடர்பில் உள்ள அனைவருக்கும் அனுப்புகின்றனர்.
இந்த பிரச்சனை எப்படி தொடங்கியது என்று நான் சொல்கிறேன். என்னை போல இந்த தவறை யாரும் செய்யக்கூடாது. கடந்த செப்டம்பர் 11 எனக்கு 5 லட்சம் பரிசு விழுந்ததாக கூறி ஒரு குறுஞ்செய்தி வந்தது.
அந்த குறுஞ்செய்தியுடன் ஒரு லிங்க் வந்தது. அதனை தொட்டவுடன் ஒரு ஆப் தானாக பதிவிறக்கம் ஆனது. ஆப் பதிவிறக்கமான அடுத்த நிமிடம் எனது மொபைல் ஹேக் ஆகிவிட்டது.
இது எனக்கு அப்போது தெரியவில்லை, அதன்பின் 3 நாட்கள் கழித்து மர்மநபர்கள் எனக்கு போன் செய்து, நீங்கள் 5 ஆயிரம் கடன் வாங்கியுள்ளீர்கள் அதை திரும்ப செலுத்துங்கள் என்று கூறினார்கள். இதனைத் தொடர்ந்து குறுஞ்செய்திகள் மற்றும் போன் தொடர்ந்து வரத் தொடங்கின.
மிகவும் மோசமாக பேசியதுடன், கடன் தொகையை திரும்ப செலுத்தவில்லை என்றால், புகைப்படங்களை மார்பிங் செய்து வைரலாக்கி விடுவோம், எல்லோருக்கும் அனுப்பி விடுமோம் என மிரட்டினர்.
அதன்பிறகு தான் இந்த விஷயம் எவ்வளவு பெரிய பிரச்சனை என்று தெரிய ஆரம்பித்தது. இது குறித்து ஹைதராபாத் சைபர் பிரிவில் புகார் கொடுத்துள்ளேன். விசாரணை நடந்து வருகிறது.
என்னுடைய வாட்ஸ் அப் நண்பர்களுக்கும் என் அப்பா அம்மாவுக்கும் சில புகைப்படங்களை அனுப்பியுள்ளார்கள். என்னுடன் இருக்கும் அனைவருக்கும் தெரியும் நான் எந்த மாதிரி ஒரு நபர் என்று.
அதனால் யாரும் இது போன்ற குறுஞ்செய்திகள் வந்தால் அதனை டவுன்லோட் செய்யாதீர்கள். டவுன்லோட் செய்த அடுத்த நிமிடம் உங்கள் போன் ஹேக் ஆகிவிடும்.
சைபர் கிரைம் போலீசார் இது குறித்து ஒரு குறுஞ்செய்தியோ, வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் போடுங்கள் என்று என்னிடம் கூறினார்கள்” என்று அழுதுக் கொண்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோ பதிவை பதிவிட்டுள்ளார்.
5 ஆயிரம் கடன் வாங்கியதாக சீரியல் நடிகையின் புகைப்படம் மார்பிங் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
மோனிஷா
உட்கட்சி தேர்தல்: அறிவாலயத்தில் திமுகவினர் போராட்டம்!
’பாகாசூரன்’ : பக்திப் படமா? அரசியல் படமா?