திருவண்ணாமலை தீபமலையில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் நேற்று முன்தினம் (நவம்பர் 30) இரவு கரையை கடந்தது. அப்போது விழுப்புரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. இன்றுவரை மழை பெய்துகொண்டே இருக்கிறது.
இதன் காரணமாக இந்த மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகள் வேகமாக நிரம்பின.
இந்நிலையில் இன்று திருவண்ணாமலை தீபமலையில் 4ஆவது இடத்தில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மலை அடிவாரப் பகுதியான வ.உ.சி நகர் கருமாரியம்மன் கோயிலின் பின்புறத்தில் சுமார் 75 குடியிருப்புகள் உள்ளன. இங்கு பெய்த கனமழையின் காரணமாக தீபமலையில் மண் அரிப்பு ஏற்பட்டது.
அப்போது, 11வது தெருவின் குடியிருப்புப் பகுதியில் சுமார் 40 டன் எடை கொண்ட பாறை உருண்டு வந்து விழுந்ததில் ஒரு வீடு பாறை மற்றும் மண்ணால் மூடப்பட்டு சேதமடைந்தது.
இந்த வீட்டில் தங்கியிருந்த ராஜேந்திரன், மீனா அவர்களது இரு பிள்ளைகள், உறவினர் பிள்ளைகள் உட்பட மொத்தம் 7 பேர் இருந்ததாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.
இவர்களை மீட்க நேற்று மாலை முதல் மத்திய – மாநில தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் போராடி வருகின்றனர்.
24 மணி நேரம் ஆகும் நிலையில் மீட்பு குழுவினருக்கு தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டு வந்த நிலையில் இன்று மாலை இரண்டு பேரின் உடல் மீட்கப்பட்டது.
மண் சரிவில் சிக்கியவர்களை இவ்வளவு நேரமாகியும் மீட்க முடியாததற்கு காரணம் என்னவென்று மீட்பு குழுவில் உள்ள சிலரிடம் பேசினோம்.
“அண்ணாமலையார் கோயிலை சுற்றி 14 கிமீ தூரம் கிரிவலப் பாதை உள்ளது. இதில் நகரப்பகுதிக்குள் வரக்கூடிய 5 கிமீ தூரத்தில் 4 கிமீ தூரம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்த கிரிவலபாதையில் இருந்து தீபமலையின் உயரம் 2600 அடி. இதில் 600 அடி உயரத்துக்கு ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
மலை அடிவாரத்தில் புது புது நகர்கள் உருவாகி சுமார் 60 வீதிகள் உள்ளன. இந்த வீதிகளும் இரு சக்கர வாகனங்கள் செல்லக்கூடிய வகையில் மட்டுமே இருக்கின்றன.
இதனால் மழைகாலங்களில் மலையில் இருந்து வரும் ஊற்றுநீர் எளிதாக வெளியேற முடியாத நிலை இருக்கிறது.
மலையை சுற்றி சமுத்திரம், அத்தியேந்தல், அடி அண்ணாமலை, வேங்கிக்கால் என 4 ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளுக்கு மலையில் இருந்து நீர் வரக்கூடிய வழிபாதைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால், அடிவாரத்தில் தண்ணீர் தேங்கி மலை அடிவாரத்தில் மண் ஊறிவிடுகிறது.
அதோடு ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்ட பாறைகளை உடைக்கும் போது மலையில் தளர்வு ஏற்படுகிறது.
இதன் காரணமாகத்தான் இப்படி மண் சரிவு ஏற்படுகின்றன. இது தொடர்ந்தால் இனி வரும் காலங்களிலும் பாறைகள் உருண்டு வந்து விழும் அபாயமும் உள்ளது.
மலையில் இருந்து வரக்கூடிய நீர்பாதைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால், தற்போது பேய்கோபுரம்(பேய் அழகர்) வழியாக அண்ணாமலையார் கோயிலுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது” என்றனர்.
மேலும் அவர்கள், “தற்போது மண் சரிவில் சிக்கியவர்களை மீட்க முடியாததற்கு காரணம், தொடர்ந்து மழை பெய்துகொண்டிருப்பதுதான். தற்போது ஒரு குழந்தை உட்பட இருவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. மலை மேல் இருந்து மழைநீரும், ஊற்று நீரும் மண்ணோடு கலந்து வந்துகொண்டிருக்கிறது.
இதனால் அடியில் மண் எடுக்கும்போது, மீண்டும் தளர்வாகி சரிவு ஏற்படும் என்பதால் மிகவும் கவனமாக மீட்பு பணிகளை செய்து வருகிறோம்” என்றும் கூறினர்.
முன்னேப்போதும் இல்லாத அளவுக்கு பெய்த கனமழையாலும், சாத்தனூர் அணை நிரம்பியதாலும் திருவண்ணாமலையை சுற்றியுள்ள பல ஏரிகள் வழிந்து உடைந்ததாலும் திருவண்ணாமலை – வேலூர் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை – பெங்களூரு சாலையும் துண்டிக்கப்பட்டது. இன்று அதிகாலைதான் சாலைகள் சரி செய்யப்பட்டன.
இதுவரை திருவண்ணாமலையில் 4 இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது.
ஏற்கனவே வ.உ.சி நகர் பகுதியில் இரண்டு இடத்திலும், சோமவார குளம் மேல் பகுதியிலும் நிலச்சரிவு ஏற்பட்டிருந்தது.
தற்போது தீப மலையின் தென்கிழக்கு பகுதியில் மேல் மலையில் ஒரு இடத்திலும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மண் சரிவு சில மாதங்களுக்கு முன் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவை நினைவுப்படுத்துவதாகவும், இனி இதுபோல் நடைபெறாமல் இருக்க ஆக்கிரமிப்புகளை அகற்றி அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உள்ளூர்வாசிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
வணங்காமுடி
பதவியேற்க சென்றபோது பயங்கர விபத்து… இளம் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு நேர்ந்த சோகம்!