சொத்து பிரச்சனை தொடர்பாக அளித்த புகாரை வாங்க மறுத்ததால் காவலர் ஒருவர் காவல்நிலையத்திற்கு முன்பு தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லால்குடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட செம்பறை கிராமத்தை சேர்ந்தவர் சிறைக்காவலர் ராஜா. இவரது சகோதரர் நிர்மலுக்கும் இவருக்கும் சொத்து பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்த பிரச்சனை பெரிதாகி அடிதடி தகராறாகவும் மாறியுள்ளது.
இதனால், லால்குடி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆனால் காவல் நிலையத்தில் ராஜா கொடுத்த புகாரை சரியாக விசாரிக்காமல் காலம் தாழ்த்தியுள்ளனர்.
இதனால் விரக்தி அடைந்த ராஜா காவல் நிலையத்தின் முன்பு நேற்று (ஏப்ரல் 30) பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த காவலர்கள் அவரை மீட்டு லால்குடி அரசு மருத்துவமனையில் 75 சதவீத தீக்காயங்களுடன் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காகத் திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி ராஜா உயிரிழந்தார்.
சிறைக்காவலர் தற்கொலை விவகாரம் தொடர்பாக காவல் உதவி ஆய்வாளர் பொற்செழியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித் குமார் உத்தரவின் பேரில் டிஐஜி சரவணன் சுந்தர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
காவல் நிலையத்தில் காவலரின் புகாரையே ஏற்காததால் அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மோனிஷா
காச தள்ளு… பாட்டில அள்ளு: கோயம்பேட்டில் டாஸ்மாக் ஏ.டி.எம்!
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கப் பொருளாளர்: மகுடம் யாருக்கு?