டிடி தமிழ் தொலைக்காட்சியில் மக்கள் எதிர்பார்க்கும் நிகழ்ச்சிகளை கொடுப்பதற்காக ஒப்பந்த அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். DD Tamil Television
நாட்டின் பொதுச்சேவை நிறுவனமான தூர்தர்ஷன் பொதிகை தொலைக்காட்சி புதிய தொடர்கள், புதிய நிகழ்ச்சிகள், செய்திகள் என புதிய வடிவமைப்பில் ‘டிடி தமிழ்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பெயர் மாற்றம் செய்யப்பட்ட டிடி தமிழ் தொலைக்காட்சியை பிரதமர் மோடி இன்று (ஜனவரி 19) தொடங்கி வைக்கிறார்.
இது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன், “டிடி பொதிகை தொலைக்காட்சி டிடி தமிழ் என்ற மாறுபட்ட கோணத்தில் இன்றைக்கு வரவிருக்கிறது.
நாம் சிறுவயதில் இருந்தே பார்த்த ’ஒலியும் ஒளியும்’ அனைவரும் விரும்பிய ஒரு நிகழ்ச்சி. ஆனால் அது காலப்போக்கில் நிறுத்தப்பட்டிருந்தது. அந்த ஒலியும் ஒளியும் நிகழ்ச்சியை மீண்டும் கொண்டு வந்திருக்கிறோம்.
சினிமா நிகழ்ச்சிகளை கொண்டு வந்துள்ளோம். மேலும் சினிமா பிரபலங்கள் கலந்து கொள்கின்ற நிகழ்ச்சி, குடும்பம் தொடர்பான சீரியல்களும் டிடி தமிழில் வரவிருக்கிறது.
அதே போல் தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை ‘டிஜிட்டல் வால்’ உருவாக்கியுள்ளோம். எச்.டி தொழில்நுட்பம் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஒரு மாறுபட்ட கோணத்தில் டிடி பொதிகை கிட்டத்தட்ட ஒரு 40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது புதிய எண்ணங்கள், புதிய வண்ணங்களாக நமக்கு காட்சி தரவிருக்கிறது.
இதில் மத்திய அரசின் திட்டங்களின் நிகழ்ச்சிகள், பாரத கலாச்சாரம் சம்பந்தமான நிகழ்ச்சிகள், அதே போல மக்களுக்கு பொழுதுபோக்கு இருக்கும் நிகழ்ச்சிகளையும் கொடுத்துள்ளோம்.
இதற்காக தூர்தர்ஷன் சி.இ.ஓ, சென்னை தூர்தர்ஷனை சார்ந்த அத்தனை அலுவலர்களும் கடந்த ஒரு வருடமாகவே கடினமான வேலைகளை செய்து இந்த நிகழ்ச்சிகளை கொண்டு வந்துள்ளார்கள்.
இந்த தொலைக்காட்சி மக்கள் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப வரவேண்டும் என்பது தான் எங்களுடைய எண்ணம்.
தூர்தர்ஷன் என்றாலே நம்பகத்தன்மையான ஒரு செய்தியைக் கொடுக்கின்ற நிறுவனமாக இருந்து வருகிறது. புதிய வடிவில் பிரதமர் நரேந்திர மோடி கையால் தொடங்கி வைப்பது மிகப்பெரிய பாக்கியமாக இருக்கிறது.
இதை தொடர்ந்து இன்று 8 இடங்களில் பண்பலை ஒளிபரப்பு கோபுரங்கள், ஜம்மு காஷ்மீரின் தூர்தர்ஷன் ஒளிபரப்பு கோபுரங்கள், 12 மாநிலங்களில் 26 எஃப்.எம் ஒளிபரப்பு கோபுரங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.
எல்லை கிராமங்களில் ஒளிபரப்பு உள்கட்டமைப்பை வலிமைப்படுத்துவதற்கு ரூ.2,500 கோடி அமைச்சரவை ஒதுக்கியுள்ளது.
அதே நேரத்தில் இன்றைக்கு தொழில்நுட்பம் என்பது மிகப்பெரிய சவாலான ஒன்று. தூர்தர்ஷனை பொறுத்தவரை தேவைக்கு அதிகமான நபர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் வேலை பிரித்துக் கொடுக்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.
இது ஒரு போட்டி உலகம். எனவே மார்கெட்டில் மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ அந்த நிகழ்ச்சிகளை கொடுப்பதற்காக ஒப்பந்த அடிப்படையிலும் நிறைய பேரை ஈடுபடுத்தியுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
டி.ஆர்.பாலு தலைமையில் திமுக கூட்டணி பேச்சுவார்த்தை குழு!
மிரட்டும் சந்தீப் கிஷனின் ’ஊரு பேரு பைரவகோனா’ டிரைலர்!
DD Tamil Television