மதுக்கடைகளை மூட வேண்டும் என்று பெண்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், டாஸ்மாக் நிறுவனம் சென்னையில் டாஸ்மாக் ஏடிஎம் இயந்திரத்தை தொடங்கி உள்ளது.
தமிழ்நாட்டில் அரசின் சார்பில் மாநிலம் முழுவதும் டாஸ்மாக் மதுபானக்கடை திறக்கப்பட்டு மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனினும் தொடர்ந்து மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதற்கிடையே சமீபத்தில் திருமண மண்டபங்கள், சர்வதேச விளையாட்டு நிகழ்ச்சிகளில் மது வழங்கலாம் என்று தமிழக அரசின் அறிவிப்புக்கு எதிர்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் டாஸ்மாக் நிறுவனம் தானியங்கி மது விற்பனை இயந்திரத்தை(டாஸ்மாக் ஏடிஎம்) தொடங்கி உள்ளது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தினால் 101 இடங்களில் வணிக வளாக மதுபான சில்லறை விற்பனை கடைகள் (Mall Shops) செயல்பட்டு வருகிறது. இச்சில்லறை விற்பனைக் கடைகளில் விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்களை தடுக்கும் வகையில் நான்கு (Mall Shops) மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் மட்டுமே, கடைகளுக்கு உள்ளேயே தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம் (Automatic Vending Machine) நிறுவ நடவடிக்கையில் உள்ளது.
இந்த தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம் மூலம் மதுபானங்கள் விற்பனை செய்யப்படும் போது அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவது தடுக்கப்படுகிறது. தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம், வணிக வளாக சில்லறை விற்பனை கடைகளுக்கு (Mall Shops) உள்ளேயே நிறுவப்பட்டுள்ளது. மேலும் தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம் மூலம் செய்யப்படும் அனைத்து விற்பனைகளும் கடைப்பணியாளர்களாகிய மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் முன்னிலையிலேயே நடைபெறும் வகையில் நிறுவப்பட்டுள்ளது.
இந்த தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம் மூலம் கடைப்பணியாளர்களின் முன்னிலையில் கடைகளின் உள்ளேயே மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதால் 21 வயதிற்கு குறைவானவர்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படமாட்டாது. தானியங்கி மதுபான விற்பனை இயந்திரத்தினை கடைகளின் பணி நேரமான நண்பகல் 12.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை (Mall Shops) திறந்திருக்கும் நேரத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும்.
இவ்வியந்திரம் கடைக்கு உள்ளேயே நிறுவப்பட்டுள்ளதால் மதுபானம் நுகர்வோர் தவிர மற்ற பொது மக்களால் அணுக முடியாது. இது குறித்து தவறான தகவல் பரப்புவோர் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
’காசு போட்டா கையில பாட்டில்’ என்ற புதிய அடையாளத்துடன் திறக்கப்பட்டுள்ள இந்த டாஸ்மாக் ஏடிஎம் இளைஞர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. எனினும் டாஸ்மாக் நிறுவனத்தின் இந்த புதிய திட்டத்திற்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இளைஞர்களின் ஆரோக்கியத்தை கெடுக்கும்
இதுகுறித்து பாஜகவை சேர்ந்தவரும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான நடிகை குஷ்பு வெளியிட்ட பதிவில், “டாஸ்மாக் மூலம் மாநிலத்திற்கு ஆபத்து உள்ளதை ஏற்கெனவே நண்பரும், திமுக எம்பியுமான கனிமொழி ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில், மதுபான விநியோகத்தில் டாஸ்மாக் ஏடிஎம் கண்டுபிடிப்பு வணிக வளாகத்திற்கு வரும் இளைஞர்களின் ஆரோக்கியத்தை மேலும் கெடுக்கும். மக்களை மதுவுக்கு அடிமையாக்கும் புது புது வழிமுறைகளை விடியல் அரசு கண்டுபிடித்துக் கொண்டே இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
பிடிஆர் ஆடியோவை விசாரித்தால்… ‘அந்த’ ஆடியோக்களையும் விசாரிக்க வேண்டும்: முரசொலி
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கப் பொருளாளர்: மகுடம் யாருக்கு?
Comments are closed.