உலக புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று (அக்டோபர் 5) இரவு மகிஷா சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது.
இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் தசரா திருவிழா புகழ்பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் குலசேகரன் பட்டினத்தில் தசரா திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று பாதிப்பினால், பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்த வருடம் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை.
பக்தர்கள் அனைவரும் 10 நாட்கள் மாலை, காப்பு அணிந்து விரதம் இருப்பர். அம்மனுக்கு நேர்த்திக்கடனாக, காளி, ராமர், அனுமன், குரங்கு, கரடி, குறவன், பிரம்மன், பிச்சைக்காரன் உள்ளிட்ட வேடங்கள் அணிந்து காணிக்கை பெற்று அம்மனுக்கு வழிபடுவர்.
முத்தாரம்மன் கோவிலில் கடந்த செப்டம்பர் 26-ஆம் தேதி தசரா திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் இரவு அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 9-ஆம் திருவிழாவான நேற்று அன்ன வாகனத்தில் கலை மகள் கோலத்தில் அம்மன் எழுந்தருளினார்.
இந்நிலையில், 10-ஆம் நாள் திருவிழாவான இன்று நள்ளிரவு 12 மணியளவில் குலசேகரன் பட்டினம் முத்தாரம்மன் கோவில் கடற்கரையில் சிகர நிகழ்ச்சி நடைபெறும்.
இந்நிகழ்ச்சியில் அம்மாள் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி மகிஷா சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மகிஷா சூரசம்ஹார நிகழ்ச்சியை காண்பதற்கு உள்ளூர் மட்டுமின்றி வெளிமாநிலத்தை சேர்ந்த பக்தர்களும் வந்துள்ளனர். இதனால் குலசேகரன்பட்டினத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது 2000 போலீசார் குலசேகரன்பட்டினத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.
செல்வம்
நல்ல நேரம் பார்த்து தேசிய கட்சி தொடங்கிய கேசிஆர்