கிருஷ்ணகிரியில் என்.சி.சி முகாமில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிவராமன் இன்று (ஆகஸ்ட் 23) காலை உயிரிழந்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் கடந்த 5ஆம் தேதி தொடங்கி 5 நாட்களுக்கு என்.சி.சி பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.
இதில் மொத்தம் 17 மாணவிகள் கலந்து கொண்ட நிலையில், என்.சி.சி பயிற்றுநராக இருந்த காவேரிப்பட்டினத்தைச் சேர்ந்த சிவராமன் (வயது 32) மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் என்.சி.சி. பயிற்றுநர் சிவராமன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
விசாரணையில் அனுமதி இல்லாமல் போலி என்.சி.சி கேம்ப் நடத்தியது தெரியவந்த நிலையில், தனியார் பள்ளியின் முதல்வர் சதீஷ்குமார், சமூக அறிவியல் ஆசிரியர் ஜெனிஃபர், தாளாளர் சாம்சம், என்.சி.சி. பயிற்றுநர்களான சக்திவேல், இந்து, சத்யா, சுப்பிரமணி என இதுவரை 11 பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
தொடர்ந்து முக்கிய நபரான கோவையில் பதுங்கியிருந்த சிவராமன் தனிப்படை போலீசார் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக முழுமையான விசாரணைகள் நடத்த காவல்துறை புலனாய்வு ஐஜி பவானீஸ்வரி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு உருவாக்கப்பட்டது. அதன்படி இக்குழு நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டு வந்தது.
இதற்கிடையே போலீசார் கைது செய்யும்போது தப்பிக்க முயற்சித்ததில் கால் முறிவு ஏற்பட்டதால் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் சிவராமன். மேலும் கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்தில் அதற்கு முன்பாகவே எலி பேஸ்டையும் தின்றுள்ளார். அது அவரது ரத்தத்தில் கலந்ததை உறுதி செய்த மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை சிவராமன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவராமனை முறையாக விசாரித்தால் மேலும் பல விவகாரங்கள் வெளியே வரும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் இன்று உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
விசா இன்றி இலங்கைக்குச் சுற்றுலா செல்லலாம்!
அரசு ஊழியர்களாக்க வேண்டும் : அங்கன்வாடி ஊழியர்கள் கோரிக்கை!