ராணுவ வீரர் கொல்லப்பட்ட விவகாரத்தில் அரசியல் நோக்கம் எதுவும் இல்லை எனவும், வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் விடுமுறைக்கு வந்திருந்த ராணுவ வீரர் பிரபு என்பவர் அடித்து கொல்லப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் சின்னசாமி என்பவர் திமுகவை சேர்ந்தவர் என்பதால் சில அரசியல் கட்சிகள் இதனை அரசியல் ரீதியான பிரச்சனை போல இணையத்தில் பதிவிட்டு வந்தனர்.
இதற்கிடையில் சின்னசாமி மீது பிரபுவின் குடும்பத்தார் போலீசில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் திடீரென சிகிச்சை பலனின்றி ராணுவ வீரர் பிரபு உயிரிழந்தார். இதனால் வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.
இதையடுத்து இந்த கொலை வழக்கு குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தாக்கூர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில் : “ராணுவ வீரர் கொலை செய்யப்பட்ட சம்பவம் துரதிஷ்டவசமானது. இந்த வழக்கில் கொலை செய்தவர், கொலையானவர் நெருங்கிய உறவினர்கள் ஆவர். எனவே இந்த கொலையில் அரசியல் நோக்கம் எதுவும் இல்லை.
பிப்ரவரி 8ஆம் தேதி பொது தண்ணீர் குழாய் இடத்தில் பிரச்னை எழுந்தது. இதைத்தொடர்ந்து சின்னசாமி மற்றும் அவரது உறவினர்கள் ராணுவ வீரர் பிரபு மற்றும் அவரது குடும்பத்தினரை தாக்கியுள்ளனர். பிப்ரவரி 14ஆம் தேதி பிரபு உயிரிழந்தார். இந்த வழக்கில் தொடர்புடைய சின்னசாமி உள்ளிட்ட 9 நபர்களும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
சில அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள் இந்த வழக்கு குறித்து தவறான தகவல்களை பரப்புகின்றன. அவ்வாறு சமூக வலைதளத்தில் வதந்திகளை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
’ஆம்பள…’ எடப்பாடியை காய்ச்சி எடுத்த கனிமொழி எம்.பி
நானியுடன் டான்ஸ் ஆடிய சந்தோஷ் நாராயணன்