மணல் கொள்ளை: காவல்துறை Vs வருவாய்த்துறை!

தமிழகம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகாவில் உள்ள ஏரிகளில் மணல் (பட்டாக் குவாரி) கொள்ளையடிப்பதை தடுத்த தாசில்தாருக்கும், மணல் கொள்ளையர்களுக்கும் இடையே நடந்த வார்த்தை மோதல் வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா சாலமரத்துப்பட்டி ஊராட்சி ஓலைப்பாடி கிராமத்தில் உள்ள ஏரியில் சட்டவிரோதமாக மணல் எடுத்து ஒரு கும்பல் அங்குள்ள சிப்காட் பகுதியில் விற்பனை செய்து வந்துள்ளது.

அதே ஏரியில் மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையில் கனிமவளம் ஏடி அனுமதி பெற்று ஒரு நிறுவனம் மணல் எடுத்து விற்பனை செய்து வருகிறது. இதனால், அனுமதி இல்லாமல் மணல் எடுப்பதை தடுக்க மாவட்ட ஆட்சியரிடம் அந்த நிறுவனம் மனு அளித்தது.

மணல் திருட்டை தடுக்க மாவட்ட ஆட்சியர் கண்டிப்புடன் உத்தரவு போட்டதும், வருவாய் துறை அதிகாரியும், காவல்துறை அதிகாரியும் தற்போது ஒருவருக்கு ஒருவர் மோதியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜனவரி 22-ஆம் தேதி ஓலைப்பாடி ஏரியில் ஆயுதப்படை போலீஸ் பிரபாகரன், அவரது அண்ணன் அருள், மற்றும் கோவிந்தசாமி, ஜெகநாதன், சம்பத் ஆகியோர் அனுமதி இல்லாமல் மணல் எடுத்துள்ளனர்.

ஆயுதப்படை போலீஸ் பிரபாகரன்

அப்போது, ஊத்தங்கரை தாசில்தார் திருமலைவாசன் மணல் எடுப்பதை தடுத்து, டிராக்டரை கைப்பற்றியுள்ளார். இதனையடுத்து ஆயுதப்படை போலீஸ் பிரபாகரன், தாசில்தார் திருமலைவாசலிடம் சண்டை போட்டுள்ளார்.

”போன வாரம்தானே ஐந்து ஆயிரம் லஞ்சம் வாங்குனீங்க… இப்போது ஏன் தடுக்குறீங்க?” என தாசில்தாரிடம் பிரபாகரன் கறாராக பேசியுள்ளார். மேலும், டிராக்டரில் இருந்த மண்ணை சாலையில் கொட்டிவிட்டு டிராக்டரை அவரது வீட்டுக்கு பிரபாகரனின் ஆதரவாளர்கள் எடுத்து சென்றுள்ளனர்.

இதனால் கோபமான தாசில்தார், கல்லாவி காவல் நிலையத்தில், பிரபாகரன், அருள், கோவிந்தசாமி, ஜெகநாதன், சம்பத் ஆகியோர் மீது புகார் கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து தாசில்தார் லஞ்சம் கேட்டு தங்களை தாக்கியதாக ஏரியில் அனுமதி இல்லாமல் மண் எடுத்தவர்கள், அரசு மருத்துவமனையில் அட்மிட்டாகி, தாசில்தார் மீது புகார் கொடுத்துள்ளனர்.

டிஎஸ்பி பார்த்திபன்

ஆனால், காவல்துறையினர் இருவர் கொடுத்த புகார் மீதும் நடவடிக்கை எடுக்காமல் தாமதப்படுத்தினர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி, பூதாகரமாகவே தாசில்தார் திருமலைவாசனிடம் ஊத்தங்கரை டிஎஸ்பி பார்த்திபன், ”நீங்கள் சரியாக ஆக்‌ஷன் எடுத்திருந்தா, இந்த அளவுக்கு பிரச்சனை வந்துருக்காது” என கடிந்துகொண்டுள்ளார்.

இந்த தகவலை தாசில்தார் கலெக்டரிடம் தெரியப்படுத்த, கலெக்டர் எஸ்.பி-யை தொடர்புகொண்டு தாசில்தார் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்க சொல்லியுள்ளார். அதன்பிறகு, கல்லாவி காவல்துறையினர் மணல் கொள்ளையில் ஈடுபட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதே கல்லாவி காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 6 ஆம் தேதி, கோயில் இடத்தில் மண் திருடியதாக அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் புகார் கொடுத்தும், வழக்கு பதிவு செய்யாமல் சிஎஸ்ஆர் மட்டும் கொடுத்துவிட்டு குற்றவாளிகளை காவல்துறை காப்பாற்றிவிட்டதாக சொல்கிறார்கள் சென்றாயன் மலை கோயில் அறநிலையத்துறை ஊழியர்கள்.

-வணங்காமுடி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

முட்டி மோதும் சீனியர்கள்… தட்டித் தூக்கும் உதயநிதி: இளைஞரணி எம்.பி. வேட்பாளர்கள் இவர்கள்தான்!  

நிதிஷ்குமார் ராஜினாமா: மல்லிகார்ஜூன கார்கே ரியாக்‌ஷன்!

+1
1
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0