கோவில்பட்டி என்றாலே, கடலை மிட்டாய்தான் நினைவுக்கு வரும். கோவில்பட்டியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலக்கடலை அதிகமாக சாகுபடி செய்யப்படுவதால், கோவில்பட்டியில் கடலை மிட்டாய், பிரதான சிறு தொழில்களில் ஒன்றாக இருக்கிறது. கோவில்பட்டியிலிருந்து உலகம் முழுக்கப் பயணிக்கும் இந்த கடலை மிட்டாயை நீங்களும் வீட்டிலேயே செய்து அசத்தலாம்.
என்ன தேவை?
(ஒரு கிலோ கடலைமிட்டாய் தயாரிக்க)
வேர்க்கடலை – 700 கிராம்
மண்டை வெல்லம் – 400 கிராம்
லிக்யூட் குளுக்கோஸ் – 10 கிராம்
ஏலக்காய்ப் பொடி – சிறிதளவு
கார்ன் பவுடர் (சோள மாவு) – சிறிதளவு
எப்படிச் செய்வது?
காய்ந்த முழு வேர்க்கடலைப் பருப்பை இரும்புச்சட்டியில் மிதமான வெப்பத்தில் பொன்னிறமாக வறுத்து, பாதியாக உடைத்து தோல் நீக்கிக் கொள்ளவும் (கடைகளில் விற்கப்படும் வறுத்த கடலைப்பருப்பை வாங்கிக்கூட தோல் நீக்கி பயன்படுத்தலாம்). தோல் நீக்கும்போதே கடலைப்பருப்பு பாதியாக உடைந்துவிடும்.
கடாயை அடுப்பில் ஏற்றி, ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி, அதில் மண்டை வெல்லத்தைத் தட்டிப் போட்டு, கட்டி படாமல் கலக்கவும். மிதமான கொதிநிலைக்கு வந்தவுடன் இறக்கி, மாவு சலிக்கும் சல்லடையால் தூசு, கசடுகளை வடிகட்டவும்.
பத்து நிமிடங்கள் கழித்து, மீண்டும் வெல்லக்கரைசலை கம்பி பாகு பதத்துக்குக் காய்ச்சி இறக்கி… அதில், வேர்க்கடலைப் பருப்பு, ஏலக்காய்ப் பொடி, லிக்யூட் குளுக்கோஸ் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி, கார்ன் பவுடர் தடவிய தட்டில் ஊற்றி, தேவையான வடிவத்தில் வெட்டி ஆறவிடவும்.
தட்டில் ஊற்றாமல், கைகளில் எண்ணெய் தடவிக் கொண்டு, கைபொறுக்கும் சூட்டில் உருட்டி உருண்டையாகவும் பிடிக்கலாம்.
கிச்சன் கீர்த்தனா: பிரெட் பக்கோடா