ஜமேஷா முபின் இறப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாக அவரது வீட்டின் மாடியில் இரண்டு பெட்டிகள் இருந்ததாகவும், அது குறித்து கேட்டபோது பெட்டிகளில் பழைய துணிகள் உள்ளதாக ஜமேஷா முபின் அவரது மனைவி நஸ்ரத்திடம் தெரிவித்துள்ளார்.
கோவை உக்கடம் ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த அக்டோபர் 23-ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் ஜமேஷா முபின் என்ற நபர் பயணித்த மாருதி காரில் இருந்த சிலிண்டர் வெடித்து உயிரிழந்தார்.
ஜமேஷா முபின் உயிரிழந்த வழக்கில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டுள்ளது.
ஜமேஷா முபின் மனைவி நஸ்ரத் டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “சமீபத்தில் நாங்கள் புதிதாக குடிவந்த கோட்டைமேடு பகுதியில் வசித்த வீட்டில் இரண்டு வாரங்களுக்கு முன்னதாக மாடியில் இரண்டு பெட்டிகள் இருந்ததை பார்த்தேன்.
அந்த பெட்டிகளில் என்ன இருக்கிறது என்று எனது கணவர் ஜமேஷா முபினிடம் கேட்டபோது, பழைய துணிகள் உள்ளதாக தெரிவித்தார். அதில் வெடிக்கக்கூடிய ரசாயான பொருட்கள் இருந்திருக்கலாம் என்று இப்பொழுது சந்தேகிக்கிறேன்.
என்னுடைய கணவரின் திட்டம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. பழைய புத்தகக் கடையில் இருந்து வேலையை விட்ட பிறகு, தேன் கடையில் சிறிது நாட்கள் வேலை பார்த்தார்.
கடைசியாக நாட்டு மருந்து கடையில் வேலை பார்ப்பதாக என்னிடம் சொன்னார். அவர் யாரிடமும் அதிகமாக பேச மாட்டார். மிகவும் அரிதாக தான் எங்களுடைய உறவினர்களிடம் பேசுவார்.
அவர் தனது தாய் மற்றும் உறவினர்களுடன் கடந்த நான்கு வருடங்களாக பேசாமல் இருந்து வந்தார். ஊனமுற்ற ஒரு பெண்ணை முபின் திருமணம் செய்ய விருப்பப்பட்டார். அதனால் தான் அவர் என்னை திருமணம் செய்து கொண்டார்.
அக்டோபர் 20-ஆம் தேதி எனக்கு அதிகமான வயிறு வலி ஏற்பட்டதால், கோட்டைமேடு பகுதியிலிருந்து கிளம்பி 4 கி.மீ தொலைவில் உள்ள அல் அமீன் காலனியில் உள்ள எனது பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டேன். அன்றைய மாலை என்னை சந்திக்க வந்த முபின், குழந்தைகளை வெளியில் அழைத்து சென்று ஐஸ் கிரீம் வாங்கி கொடுத்தார்.
அவர் உதடு பேசுவதற்கு கொஞ்சம் சிரமப்படும். அவர் எப்போதும் குரான் வாசித்து கொண்டே இருப்பார். மெக்கானிக்கல் இஞ்சினியரிங் படித்த ஜமேஷா முபின் திருமணத்திற்கு முன்பாக, பெங்களூரில் உள்ள தொழிற்சாலையில் வேலை பார்த்தார். அப்போது அவர் மன உளைச்சலில் இருந்ததாக என்னிடம் தெரிவித்திருக்கிறார்.
அக்டோபர் 23-ஆம் தேதி இரவு 12.08 மணியளவில் எப்பொழுது வீட்டிற்கு வருவீர்கள் என்று நான் அவருக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன். நாளைக்கு தொடர்பு கொள்வதாக அவர் எனக்கு மெசேஜ் செய்தார். இளைய மகள் தொடர்ந்து அழுது கொண்டிருந்ததால், வீடியோ கால் வர முடியுமா என்று அவருக்கு மறுபடி செய்தி அனுப்பினேன். பதில் எதுவும் எனக்கு வரவில்லை. அது தான் நான் கடைசியாக அவரிடம் பேசியது” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
ஃபிரிட்ஜ் வெடிக்க என்ன காரணம்? உஷார் மக்களே உஷார்!
ஐ.ஜி. முருகன் மீதான பாலியல் புகார்: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!