பொது இடங்களில் ப்ராங்க் வீடியோ எடுத்து மக்களுக்கு இடையூறாக நடந்து கொண்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை போலீஸ் தெரிவித்துள்ளனர்.
டிஜிட்டல் உலகத்தில் சிலர் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளப் பல புதுமையான விஷயங்களைச் செய்து வருகின்றனர்.
பலர் தங்களது யூடியூப் சேனல்கள் மக்கள் மத்தியில் பிரபலமடைய வேண்டும் என்பதற்காகத் தினசரி அவர்கள் செய்யும் வேலைகள் முதல் பல தகவல்களையும் பதிவிட்டு வருகிறார்கள்.
அதில் ப்ராங்க் வீடியோ முக்கியத்துவம் வகித்து வருகிறது. ப்ராங்க் வீடியோ எடுக்கும் போது மக்களுக்கே தெரியாமல் கேமராவை மறைத்து வைத்துவிட்டு, ஏதோ ஒரு வித்தியாசமான நடவடிக்கை மூலம் மக்களை வீடியோவிற்குள் இணைத்து விடுகிறார்கள்.

சில ப்ராங்க் வீடியோக்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும், பல வீடியோக்கள் எரிச்சலடைய செய்கின்றன.
ஆனால் வீடியோ எடுப்பவர்கள் மறைத்து வைத்திருக்கும் கேமராவை மக்களிடம் காண்பித்து, “இது ஒரு ப்ராங்க் வீடியோ, கேமரா அங்க இருக்கிறது பாருங்க” என்று சாதாரணமாகக் கூறிவிட்டுச் செல்கின்றனர்.

இதுபோன்ற நடவடிக்கைகள் பலருக்கு இடையூறாகவும் அமைகின்றன. இந்நிலையில் கோவை போலீஸ், ப்ராங்க் வீடியோக்களுக்கு தடை விதித்துள்ளது.
அதன்படி, இயல்பு வாழ்க்கைக்குப் பாதிப்பு தரும் வகையில் நடந்துகொள்வதாக ப்ராங்க் வீடியோ குறித்து புகார் வந்தால் வழக்குப் பதிவு செய்யப்படும் என்று எச்சரித்துள்ளனர்.
மேலும், வழக்குப் பதிவு செய்வது மட்டுமல்லாமல், வழக்குப் பதிவு செய்யப்படுபவருக்கு சொந்தமான யூடியூப் சேனலும் முடக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மோனிஷா