கோவை கார் வெடிப்பு: போலீஸ் விசாரணையில் புது தகவல்!
கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட ஃபிரோஸ் இஸ்மாயில் கேரளா சிறையில் உள்ளவர்களைச் சந்தித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
கோவையில் உக்கடம் அருகே கடந்த அக்டோபர் 23ஆம் தேதி நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் காரில் பயணித்த ஜமேஷா முபீன் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார்.
இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் குறித்து விசாரிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக உக்கடம் பகுதியைச் சேர்ந்த முகமது தல்கா மற்றும் முகமது அசாருதீன், ஜி.எம்.நகர்ப் பகுதியைச் சேர்ந்த முகமது ரியாஸ், ஃபிரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் 6வது நபராக ஜமேஷா முபீன் உறவினரான அப்சர் கான் என்பவரை தனிப்படை போலீசார் கடந்த அக்டோபர் 26 அன்று இரவு கைது செய்தனர்.
அவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதுடன் 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து இந்த வழக்கை என்.ஐ.ஏ விசாரிக்க வேண்டும் என்று தமிழக அரசு பரிந்துரைத்ததை அடுத்து கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கை என்.ஐ.ஏ விசாரிக்க மத்திய அரசு உத்தரவிட்டது.
தற்போது கைதானவர்களை 3நாள் காவலில் எடுத்து என்.ஐ.ஏ விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் பரபரப்பான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
2019ஆம் ஆண்டில் இலங்கை தேவாலயம் மீது தாக்குதல் நடத்திய ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பிலிருந்ததாக என்.ஐ.ஏ வால் கைது செய்யப்பட்டு கேரள வியூர் சிறையில் அடைக்கப்பட்ட ரசித் அலி மற்றும் முகமது அசாருதீன் ஆகியோரை ஃபிரோஸ் சந்தித்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சந்திப்பினுடைய நோக்கம் என்ன? சந்திப்பின் போது பேசியது என்ன என்று போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
மோனிஷா
குஷ்பு பதிவு: மன்னிப்பு கேட்ட கனிமொழி!
ரிஷி சுனக்குடன் தொலைபேசியில் பேசிய மோடி!