கோவை கார் சிலிண்டர் வெடித்த விபத்தில் உயிரிழந்த நபரின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
கோவை உக்கடம் அருகே இன்று (அக்டோபர் 23) காலை காரில் எடுத்து சென்ற 2 சிலிண்டர்களில் ஒரு சிலிண்டா் வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது. இதில் அந்த காரில் வந்த நபர் உயிரிழந்தாா்.
நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து போலீசாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
மேலும் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கோவைக்கு நேரில் சென்று சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டார்.
வெடிவிபத்து நிகழ்ந்த இடத்தில் பால்ரஸ் குண்டுகள், ஆணிகள் உள்ளிட்டவை இருந்துள்ளது. இதனையடுத்து இந்த வெடி விபத்தில், வாகனத்தில் இருந்த சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதா? பின்னணியில் ஏதேனும் சட்டவிரோத செயல்கள் இருக்கிறதா? என்பது குறித்து போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
அடையாளம் தெரிந்தது!
இந்நிலையில் டிஜிபி சைலேந்திரபாபு கார் சிலிண்டர் விபத்து தொடர்பாக முக்கிய தகவலை தெரிவித்துள்ளார்.
அவர், “சென்னை பதிவு எண் கொண்ட கார் பொள்ளாச்சியை சேர்ந்த பிரபாகர் என்ற நபரின் பெயரில் பதிவு செய்யப்பட்டு இருந்தது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் காரை விற்பனை செய்து 3 ஆண்டுகள் ஆனதாக தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் உயிரிழந்த நபர் உக்கடம் பகுதியைச் சேர்ந்த ஜமேஷா முபின் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவர் கோவையில் துணி வியாபாரம் செய்து வந்துள்ளார். அவர் வீட்டில் நடத்திய சோதனையில் ஏராளமான வெடிபொருட்கள் சிக்கியுள்ளன.
மேலும் வழக்கு விசாரணை தொடர்பாக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்
உயிரிழந்ததாக கருதப்படும் ஜபேஷா முபினிடம் கடந்த 2019ம் ஆண்டு தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளதும் தற்போது தெரியவந்துள்ளது.
குன்னூரில் ஒருவரிடம் விசாரணை!
இதற்கிடையே கார் சிலிண்டர் வெடித்த விபத்து தொடர்பாக குன்னூர் ஓட்டுப்பட்டறை என்ற இடத்தைச் சேர்ந்தவரிடம் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார் சிலிண்டர் வெடித்தபோது அந்த இடத்தில் செல்போன் சிக்னல் ஒன்று குன்னூருக்கு காண்பித்ததன் அடிப்படையில் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
T20 WorldCup 2022 : ”என் வாழ்க்கையின் சிறந்த போட்டி இதுதான்!” – விராட் கோலி
T20 WorldCup 2022: பாகிஸ்தானின் பக்கா ஸ்கெட்ச்… சொதப்பிய ஓபனர்கள்… துவம்சம் செய்த கிங் கோலி