கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் கைதான 5 பேர் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கோவை உக்கடம் அருகே கடந்த 23ம் தேதி கார் சிலிண்டர் வெடித்த விபத்தில் ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். தீபாவளியையொட்டி நடைபெற்ற இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் டிஜிபி சைலேந்திர பாபு மற்றும் சட்டம் ஒழுங்கு கூடுதல் ஏடிஜிபி தாமரைகண்ணன் கோவையில் முகாமிட்டு இந்த வழக்கினை தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக உயிரிழந்த ஜமேஷா முபினுக்கு உதவியதன் பேரில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே செய்தியாளர்களை இன்று (அக்டோபர் 25) சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “கோவை கார் விபத்தில் கைது செய்யப்பட்டவர்கள் மீது ஏன் தேசிய பாதுகாப்பு சட்டப்பிரிவு பதியப்படவில்லை?” என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
12 மணி நேரத்தில் நடவடிக்கை!
இந்நிலையில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தற்போது செய்தியாளர்களை சந்தித்தார்.
அவர் கூறுகையில், ”கடந்த 23ம் தேதி உக்கடத்தில் நடந்த கார் வெடித்த விபத்தை தொடர்ந்து அந்த பகுதி காவல்துறையினரின் முழு கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.
இதில் உயிரிழந்த நபரான ஜமேஷா முபின் என்பவரின் அடையாளத்தை 12 மணி நேரத்தில் போலீசார் புலன்விசாரணையில் கண்டுபிடித்தனர்.
மேலும் உயிரிழந்த ஜமேஷா முபின் என்பவரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு கைப்பற்றபட்ட பொருட்களை நீதிமன்றத்திற்கு அனுப்பியுள்ளோம்.
வெடித்து சிதறிய கார் 10 பேர் கைகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. அந்த 10 பேரையும் அடுத்தடுத்து விசாரணைக்கு உட்படுத்தினர்.
உபா சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு!
அந்த விசாரணையின் அடிப்படையில் 5 நபர்கள் நேற்றிரவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது உபா(UAPA, சதி செய்தல், இரு பிரிவினர் இடையே மோதல் உண்டாக்குதல் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இதற்கிடையே இந்த சம்பவத்தில் தொடர்புடையாக சந்தேகிக்கப்படும் நபர்கள் மீது தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.” என்று காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
முடங்கிய வாட்ஸ் அப்… கலகலத்த ட்விட்டர்
இங்கிலாந்து மன்னரையே மலைக்கவைக்கும் ரிஷி சுனக்கின் சொத்து மதிப்பு!