சத்தான கொத்தமல்லியை உணவில் சேர்த்தால் கொத்தாக எடுத்து வீசுவதே நம்மில் பலரின் வழக்கமாக உள்ளது. அப்படிப்பட்டவர்களுக்கு இந்தக் கொத்தமல்லித் தொக்கு செய்து கொடுங்கள். வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். விரும்பி வாங்கி சாப்பிடுவார்கள். இன்சுலின் சுரப்பைத் தூண்டி, ரத்த சர்க்கரை அளவைக் குறைக்க செய்யும் ஆற்றல் கொத்தமல்லிக்கு உண்டு.
என்ன தேவை? Kothamalli Thokku
கொத்தமல்லி – 2 கட்டு
நறுக்கிய வெங்காயம் – 100 கிராம்
இஞ்சி – 4 இன்ச் நீள துண்டு
பூண்டு – 8 பல்
பச்சை மிளகாய் – 6
தேங்காய் – ஒன்று
எலுமிச்சை – 2
சோம்பு – 2 டீஸ்பூன்
முந்திரி – 30 கிராம்
எண்ணெய் – 50 மில்லி
உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
கொத்தமல்லியை சுத்தம் செய்யவும், இஞ்சியைத் தோல் சீவவும், கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு மூன்றையும் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும். தேங்காய், ஒரு டீஸ்பூன் சோம்பு, முந்திரி இவற்றையும் தனியாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, ஒரு டீஸ்பூன் சோம்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் அரைத்து வைத்திருக்கும் கொத்தமல்லி பேஸ்ட்டை அதில் சேர்த்து வதக்கி, அரைத்த தேங்காய் கலவையை சேர்க்கவும். நன்கு கொதித்ததும் எலுமிச்சைச் சாறை ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து இறக்கவும்.