பாலை ஒதுக்கும் குழந்தைகளுக்கு கால்சியம் சத்தைக் கொடுக்கும் தகுதி கொத்தமல்லிக்கு உண்டு. உடலில் ஏற்படும் நீர் வறட்சியைக் கொத்தமல்லி குறைக்கும். எச்சில் சுரப்பைச் சீராக்கும். இந்தக் கொத்தமல்லிப் பணியாரத்தில் கார்போஹைட்ரேட் மற்றும் புரோட்டீன் நிறைந்துள்ளதால் அனைவருக்கும் ஏற்றது. ஆரோக்கியத்துக்கு உகந்தது.
என்ன தேவை?
தோசை மாவு – ஒரு கப்
கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி அளவு
சீரகம் – 2 சிட்டிகை
பச்சை மிளகாய் – ஒன்று
எண்ணெய் – தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
சிறிதளவு தோசை மாவுடன் கொத்தமல்லித்தழை, சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்து எடுக்கவும். மீதமுள்ள மாவுடன் அரைத்த மாவைச் சேர்த்துக் கலக்கவும். பணியாரக் கல்லைக் காய வைத்து, மாவைப் பணியாரங்களாக ஊற்றி, எண்ணெய் விட்டு வெந்ததும் எடுக்கவும்.
சிறு தீயில் வேகவைத்தால், மொறுமொறுப்பு இருக்கும். விருப்பப்பட்டால் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வெங்காயம், கொத்தமல்லித்தழை கலந்தும் செய்யலாம்.