கோவை கொடிசியா மைதானத்தில் நேற்றும், இன்றும் (டிசம்பர் 1) கொங்கு உணவுத் திருவிழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதற்காக புக் மை ஷோ ஆன்லைன் தளத்தில் டிக்கெட்டுகள் விற்கப்பட்டு பெரிய அளவில் விளம்பரம் செய்யப்பட்டது.
அதில் 1000 க்கும் மேற்பட்ட உணவு வழங்குபவர்கள், 400 விதவிதமான உணவு வகைகள், கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் திருமண கண்காட்சி – அனைத்தும் ஒரே இடத்தில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு 800 ரூபாயும், 5 முதல் 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு 500 ரூபாயும் வரியுடன் வசூலிக்கப்பட்டது.
சுமார் 10,000க்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்பனையாகிருந்த நிலையில், புக் செய்து அங்கு வந்த மக்களுக்கு பார்க்கிங் வசதிகள் கூட செய்து கொடுக்கப்படவில்லை.
அதைத்தாண்டி ஆசையுடன் பலவகை உணவை உண்ணச் சென்ற மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. உணவுகள் வழங்குவதற்கு சரியான ஏற்பாடு செய்யப்படாத காரணத்தால் குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை ஒவ்வொரு உணவையும் வாங்க நீண்ட க்யூவில் நெடுநேரம் காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.
ஒருகட்டத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும், மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் இதுதொடர்பான வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
கொங்கு உணவு திருவிழாவுக்கு சென்று வேதனையடைந்த பலரும், இதனை கொங்கு உணவு திருவிழா என்று சொல்வதை விட, கொங்கு திருட்டு திருவிழா என்று சொல்ல வேண்டும் என்று தெரிவித்து வருகின்றனர்.
அதிகளவில் டிக்கெட்டுகளை விற்றுவிட்டு, அதற்கான ஏற்பாடுகளை சரியாக செய்யாமல் விட்டதே இந்தக் குழப்பங்களுக்கு காரணம் என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதற்கிடையே இரண்டாவது நாளாக இன்றும் கொங்கு உணவுத் திருவிழா நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: சோளம் கம்பு பூண்டு ரொட்டி
டாப் 10 நியூஸ்: மகாராஷ்டிரா அடுத்த முதல்வர் தேர்வுக் கூட்டம் முதல் 11 மாவட்டங்களில் கனமழை வரை!