கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக 3600 பக்க அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும், அதில் சசிகலாவிடம் மட்டும் 30 மணி நேரம் விசாரணை நடத்தி 280 கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவரது தோழி சசிகலா உள்ளிட்டோருக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது.
இந்த எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. அப்போது இரவு காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார்.
இது குறித்த வழக்கை கோத்தகிரி போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக கூறி ஏ.டி.எஸ்.பி கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான தனிப்படை போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் கொடநாடு மேலாளர் நடராஜன், ஜெயலலிதாவின் தோழி சசிகலா மற்றும் வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள சயான், வாளையார் மனோஜ் உள்ளிட்ட 10 பேர் உள்பட 316 பேரிடம் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் திடீரென கடந்த செப்டம்பர் மாதம் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கொடநாடு வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டார்.
அதனை அடுத்து தனிப்படை போலீசார் விசாரணையை நிறுத்தியதுடன், இதுவரை அவர்கள் மேற்கொண்ட விசாரணை குறித்த அறிக்கையை வழக்கு விசாரணை நடைபெற்று வரும் உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கில் விரைவில் விசாரணையை தொடங்கவிருக்கும் நிலையில் தனிப்படை போலீசார் தாக்கல் செய்த அறிக்கை குறித்து சில தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதில் தனிப்படை போலீசார் 316 பேரிடம் மேற்கொண்ட விசாரணையின் மூலம் பெறப்பட்ட வாக்குமூலங்கள் மட்டும் 3600 பக்கங்களாக பதிவு செய்து அறிக்கையாக சமர்ப்பித்து இருப்பது தெரியவந்துள்ளது.
குறிப்பாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியும், கொடநாடு எஸ்டேட் பங்குதாரருமான சசிகலாவிடம்,
மேற்குமண்டல ஐஜி சுதாகர் தலைமையில் சென்ற தனிப்படை போலீசார் 30 மணி நேரம் விசாரித்ததாகக் கூறப்படுகிறது.
அவரிடம் 280 கேள்விகளை கேட்டதாகவும் அதற்கு அவர் அளித்த பதில்களை 30 பக்கங்களாக சமர்ப்பித்து இருப்பதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
கலை.ரா
“மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்” -ஆய்வுக்கு பின் முதலமைச்சர் பேட்டி!
நீரில் மூழ்கிய பயிர்கள்: சீர்காழியில் முதலமைச்சர் ஆய்வு!