கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக உதகை நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் ஆஜராகியிருக்கின்றனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் கொலை, கொள்ளை, தற்கொலை என பல திடுக்கிடும் சம்பவங்கள் அரங்கேறின.
இந்த வழக்கில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் உள்பட 11 பேருக்கு தொடர்பிருப்பதாகக் கூறப்பட்டது. இதில் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்துவிட கேரளாவைச் சேர்ந்த சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் என்று கைது செய்யப்பட்டனர்.
தனிப்படை போலீஸ் விசாரித்து வந்த இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாததால், கடந்த மாதம் தான் சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.
ஏற்கனவே சசிகலா, கொடநாடு மேலாளர் நடராஜன் உள்ளிட்ட 316 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டிருந்தது. அதுதொடர்பான அனைத்து ஆவணங்களும் சிபிசிஐடி போலீசிடம் ஒப்படைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சிபிசிஐடி டிஜிபி ஷகீல் அக்தர் இரண்டு நாட்களுக்கு முன்பு கொடநாடு பங்களாவுக்கு சென்று விசாரணை நடத்தினார்.
இந்தநிலையில் கொடநாடு வழக்கு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இன்று(அக்டோபர் 28) விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான போலீசார் ஆஜராகியிருக்கின்றனர்.
இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்க இருக்கிறார்கள்.
இன்றைய வழக்கு விசாரணையின்போது 10 குற்றவாளிகளில் சயான் மற்றும் வாளையாறு மனோஜ் ஆகியோர் மட்டுமே அழைத்து வரப்பட்டிருக்கின்றனர்.
கலை.ரா