கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் விசாரணை நடத்திய தனிப்படை போலீசார் ஆயிரம் பக்கங்கள் கொண்ட அறிக்கையை சீலிட்ட கவரில் உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
கோத்தகிரி அருகே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பங்களாவின் காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். விலை உயர்ந்தப் பொருட்கள் ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ், கேரளாவைச் சார்ந்த சயான், வாளையார் மனோஜ், ஜம்ஷீர் அலி உள்ளிட்ட 11 பேர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.
அவர்கள் மீது கோத்தகிரி சோலூர் மட்டம் போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் முதல் குற்றவாளியான கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
இதையடுத்து சயான் சென்ற கார் விபத்தில் சிக்க மனைவி, குழந்தையை பறிகொடுத்தார்.
இதேபோன்று கொடநாடு எஸ்டேட் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் தினேஷ் தற்கொலை செய்துகொண்டார். இப்படி மர்மங்கள் நிறைந்தது இந்த வழக்கு.
இதற்கும் முன்னாள் முதல்வரும், தற்போதைய அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கும் தொடர்பு இருப்பதாக அரசியல் ரீதியாக குற்றம் சாட்டப்பட்டது.
இதில் சயான் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு வழக்கு விசாரணையானது உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
தொடக்கத்தில் இந்த வழக்கின் விசாரணையை நீலகிரி மாவட்ட காவல் துறையினர் மேற்கொண்ட நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி தனிப்படை போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டு கூடுதல் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
நீலகிரி மாவட்ட ஏ.டி.எஸ்.பி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இது வரை ஜெயலலிதாவின் தோழி சசிகலா, ஜெயா டிவி மேலாண்மை இயக்குனர் விவேக் ஜெயராமன், கோவை முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி, கொடநாடு மேலாளர் நடராஜன் உள்ளிட்ட 316 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
இதனிடையே கொடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணையை தமிழக டிஜிபி சைலேந்திர பாபு கடந்த 30-ந்தேதி சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார்.
அதற்காக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் ஏடிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான தனிப்படை போலீசார் நடத்திய விசாரணை விபரங்கள் மற்றும் 316 பேரிடம் பெறப்பட்ட வாக்குமூலங்கள்,
மற்றும் கைப்பற்றபட்ட ஆவணங்களை தனிப்படை ஏ.டி.எஸ்.பி கிருஷ்ணமூர்த்தி மாவட்ட நீதிபதி முருகனிடம் இன்று (அக்டோபர் 10) ஒப்படைத்தார்.
ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களை மூடி முத்திரையிடப்பட்ட கவரில் வைத்து சமர்ப்பித்தனர்.
சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரணை விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த ஆவணங்கள் அனைத்தும் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
கலை.ரா
நயன்- விக்கியிடம் விளக்கம் கேட்கப்படும் : அமைச்சர் மா.சுப்ரமணியன்
சிரஞ்சீவியை காப்பாற்றிய காட்ஃபாதர்