மின்கட்டண உயர்வு: திருப்பூரில் இருந்து முதல்வருக்கு பறந்த கடிதங்கள்!

Published On:

| By Monisha

Knitters sent letters to the CM

மின்கட்டண உயர்வை திரும்பப் பெறக் கோரி திருப்பூர் பின்னலாடை தொழில்துறையினர் தமிழக முதலமைச்சருக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடிதங்களை அனுப்பி வைத்தனர்.

தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பு திருப்பூர் பகுதி ஒருங்கிணைப்பாளர்களாக டீமா தலைவர் முத்துரத்தினம், நிட்மா இணை செயலாளர் கோபி, டெக்பா தலைவர் ஸ்ரீகாந்த் ஆகியோர் தலைமையில் பின்னலாடை சார்ந்த தொழில்துறையினர் திருப்பூர் பி.என்.ரோட்டில் உள்ள டீமா சங்க அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக நடந்து வந்தனர். பின்னர் திருப்பூர் ரயில் நிலையம் முன்புறம் உள்ள விரைவு தபால் அலுவலகத்தில் தனித்தனியாக முதலமைச்சருக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட தபால்களை அனுப்பினார்கள்.

அதில், ‘தொழில்துறையினருக்கு நிலையான கட்டணமாக 1 கிலோ வாட் ரூ.35 என்ற இருந்தது, ரூ.75, ரூ.150, ரூ.550 என உயர்த்தியுள்ளது. இதை ஒரே பிரிவில் பழைய கட்டணமான ரூ.35-க்கு மாறியமைக்க வேண்டும். பீக்ஹவர் கட்டணங்களைத் திரும்ப பெற வேண்டும்’ என்று கோரிக்கை வைத்திருந்தனர்.

இதுகுறித்து பேசியுள்ள ஒருங்கிணைப்பாளர்கள் கோபி, முத்துரத்தினம், ஸ்ரீகாந்த் ஆகியோர், “தொழில் நிறுவனங்கள் மூடல் வேலைவாய்ப்பை அதிகம் வழங்கி வரும் ஜவுளித்தொழிலுக்கு 460 சதவிகிதம் மின்கட்டணத்தை அதிகரித்துள்ளது. மின்கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி முதலமைச்சருக்கு இ-மெயில் மூலம் மனு அனுப்பி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து விரைவு தபால் மூலமாக கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அடுத்தகட்டமாக வருகிற 25ஆம் தேதி அனைத்து பின்னலாடை தொழில் நிறுவனங்களையும் மூடி தொழில்துறையினர் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்குச் சென்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், முதலமைச்சருக்கு அனுப்பி வைக்க கலெக்டரிடம் கடிதம் கொடுக்க உள்ளோம்.

தமிழக முதலமைச்சர் உடனடியாக மின்கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் திருப்பூரில் உள்ள பனியன் தொழில் வேறு மாநிலத்துக்கு இடம்பெயர்ந்து சென்றுவிடும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 24ஆம் தேதி திருப்பூர் வருகிறார். அதற்குள் பின்னலாடை துறையினரின் கோரிக்கையை நிறைவேற்றிக்கொடுப்பார் என்று எதிர்பார்க்கிறோம்” என்று அவர்கள் கூறினார்கள்.

ராஜ் 

30 நாட்களில் சொத்துப் பத்திரம்: வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு ஆர்பிஐ அதிரடி!

சனாதன ஒழிப்பு ஒரு கலாச்சாரப்புரட்சி! – பகுதி 2

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share